பக்கம் எண் :

பக்கம் எண்:244

உரை
 
3. மகத காண்டம்
 
15. யாழ்நலந் தெரிந்தது
 
         
     5    கொன்றையம் பசுங்காய் பெருக்கியும் பயற்றின்
          நன்றுவிளை நெற்றினைச் சிறுக்கியுங் குன்றா
          இன்றீங் கரும்பினைச் சுருக்கியும்ம் விண்டலைத்
          துன்னரும் விசும்புற நீட்டிய நெறியும்
          இன்னவை பிறவு மிசைவில வெல்லாம்
     10    படைத்தோன் படைத்த குற்ற மிவையென
          எடுத்தோத் துரையி னியம்பி யாஅங்
          கியானை வணக்கு மைங்கதி யருவினை
          வீணை வித்தகத் தவனினு மிக்கதன்
          மாணல முணரே மடவிய னிவனென
     15    நாணக் காட்டு நனித்தொழில் புனைந்தேம்
 
                 (இதுவுமது)
            5 - 15 ; கொன்றை ....... புனைந்தேம்
 
(பொழிப்புரை) பின்னரும் அத் தோழி உதயணனை நோக்கிக்
  கூறுபவள்'' பெருமானே ! உலகம் படைத்த பெரியோன் பயனற்ற
  அழகிய கொன்றையினது பசிய காயைப் பெரிதாகவும் பயன்மிக்க
  பயற்றினது பெரிதும் விளைதலையுடைய நெற்றினைச் சிறியதாகவும்
  குறையாத இனிமை மிக்க கரும்பினை அளவிற் சுருக்கியும், வறிய
  மூங்கிலைக் கிட்டுதற்கரிய வானத்தை அளாவும்படி நீட்டிய
  முறைமையும் இவைபோலத் தம் பிறப்பிற்கும் பயனுக்கும்
  பொருத்தமற்ற படைப்புக்களாய் அமைந்த பொருள்களெல்லாம்
  நம்மனோர்க்கு இவையெல்லாம் அப் படைப்புக் கடவுள் செய்த
  குற்றமேயாகுமென்று வாய்விட்டுக் கூறுவனபோல நமக்குக் குறிப்பால்
  உணர்த்துகின்றன அல்லவோ ?அங்ஙனமே நளகிரி என்னும்
  யானையை அடக்கி ஐந்துவகைப்பட்ட கதியினையுடைய அருஞ்
  செயலையுடைய யாழினை இயக்குதலிலே வித்தகமுடைய உதயண
  மன்னனையும் காட்டில் மிகச்சிறந்த உன்னுடைய மாண்புமிகு கலை
  நலங்களையெல்லாம் யாங்கள் உணர்ந்துகொள்ளமாட்டாது. யாதும்அறியா
  மடவோனோ அல்லனோ என்று நின்னை அறிந்து கொள்ளற் பொருட்டு
  யாங்களே நாணுதற்குரிய சில சூழ்ச்சிகளை நின்மாட்டுச் செய்தேம்.
  இக்குற்றம் நின்னை உதயணனைப் போன்று ஓர் அரசன் மகனாகப்
  படையாமல் அடக்கமுடைய அந்தணனாகப் படைத்த அக் கடவுள்
  குற்றமேயாகும். எம்மை மன்னித்திடுக என்று கூறி, என்க.
 
(விளக்கம்) நெற்று - முதிர்ந்த காய், சுருக்கி - நீளாமற் செய்து.
  விண்டல்-மூங்கில். எடுத்தோத்துரை-எடுத்து ஓதும் மொழி - ஐங்கதி
  வீணை - சச்சபுடம் முதலிய ஐவகைத் தாளகதியையுடைய யாழ்.
  உன்னுடைய கலைத்திறத்திற்கேற்ப உதயணன் போன்று உன்னை
  அரசனாகப் படைக்காமல் அடக்கமுடைய அந்தணனாய்ப் படைத்தமையால்
  யாங்கள் உன்னை உணர மாட்டேம் ஆயினேம். எனவே இக்குற்றம்
  எம்முடையதன்று. படைப்புக் கடவுளின் குற்றம் ஆகும் என்றவாறு.
  வித்தகத்தவன்- உதயணன், மடவியன் - மடவோன் காட்டும் நனித் தொழில்
  - நீ உன்னை எங்களுக்குக் காட்டுதற்குரிய மிகையான சூழ்ச்சி.