பக்கம் எண் :

பக்கம் எண்:245

உரை
 
3. மகத காண்டம்
 
15. யாழ்நலந் தெரிந்தது
 
            மாணக் காட்டுநின் மாணாக் கியரேம்
           ஆயினெ மினியென வசதி யாடிய
           மைதவழ் கண்ணி கைதவந் திருப்பாச்
           செவ்வழி நிறீஇச் செவ்விதிற் றம்மெனச்
     20    செதுவன் மரத்திற் சேக்கை யாதலின்
           உதவா திதுவென வுதயணன் மறுப்ப
           யாணர்க் கூட்டத் தியவனக் கைவினை
           மாணப் புணர்ந்ததோர் மகர வீணை
           தரிசகன் றங்கைக் குரிதென வருளிய
     25    கோல நல்லியாழ் கொணர்ந்தனள் கொடுப்பத்
 
                 (இதுவுமது)
             16 - 25 ; மாண .... கொடுப்ப
 
(பொழிப்புரை) ''ஐய ! பேதையரேமாகிய யாங்கள் உன்னுடைய
  மாணாக்கியரேம் ஆயினேம் என்று நகைமொழி கூறிய யாப்பியாயினி
  உதயணனை நோக்கிப் பெருமானே ! மீண்டும் எம்பால் நின்னுடைய
  வஞ்சனையைச் செய்யாமல் இந்த யாழினைச் செவ்விய வழியிற்
  பண்ணுறுத்திச் செவ்விதாக எமக்குத் தந்தருளுக என்று வேண்டா நிற்ப;
  அதுகேட்ட உதயணன், ??தோழி! இந்த யாழ் பட்டமரங்களினது
  சேர்க்கை ஆதலின் இது பண்ணுறுத்தி இயக்குதற்கு உதவாது'' என்று
  கூறி மறுப்ப, அது கேட்ட யாப்பியாயினி  இது கிடக்க என்று அழகிய
  நன்மரச் சேர்க்கையாலாகியதும் யவன நாட்டுத் தச்சர் தங்கள் தொழில்
  திறம்மாட்சிமையுறும் பொருட்டு இயற்றியதும் ஆகிய மகரவீணையாகிய
  தருசக மன்னன தன் தங்கையாகிய பதுமாபதிக்குச் சிறப்பாக வழங்கிய
  அழகிய நல்லதொரு யாழை எடுத்துக்கொணர்ந்து உதயணன்பாற்
  கொடாநிற்ப; என்க.
 
(விளக்கம்) அசதியாடுதல் - பரிகசித்தல். கண்ணி - யாப்பியாயினி.
  கைதவம்-வஞ்சனை. முன்னர் யான் யாழ் வித்தை அறிகிலான்! என்றன.
  ஆகலின் மீண்டும் உன்னுடைய கைதவத்தைத் திருப்பாதே கொள்
  என்றாள். செவ்வழி-நல்வழி. தம்-தருக, செதுவன்மரம் பட்டமரம், சேக்கை
  - சேர்க்கை, யாணர் - அழகு. தரிசகன் - தருசகன் மகரவீணையாகிய
  யாழ் என்க,