பக்கம் எண் :

பக்கம் எண்:25

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
            பொங்குமழை தவழும் பொதியின் மீமிசைச்
     185    சந்தனச் சோலைதொறுந் தலைச்சென் றாடி
           அசும்பிவ ரடைகரைப் பசுந்தோ டுளரிச்
           சுள்ளிவெண் போது சுரும்புண விரித்து
           மணிவாய் நீலத் தணிமுகை யலர்த்தி
           ஒண்பூங் காந்த ளுழக்கிச் சந்தனத்
     190    தந்த ணறுமல ரவிழ மலர்த்தி
           நறுங்கூ தாளத்து நாண்மல ரளைஇக்
           குறுந்தாட் குரவின் குவிமுகை தொலைச்சி
           முல்லைப் போதி னுள்ளமிழ் துணாஅப்
           பல்பிட வத்துப் பனிமலர் மறுகிப்
     195    பொற்றார்க் கொன்றை நற்றாது நயந்து
           சாத்துவினைக் கம்மியன் கூட்டுவினை யமைத்துப்
           பல்லுறுப் படக்கிய பையகங் கமழ
           எல்லுறு மாலை யிமயத் துயர்வரை
           அல்குதற் கெழுந்த வந்தண் டென்றால்
 
                 (தென்றல்)
           184 - 199; பொங்கு............தென்றால்
 
(பொழிப்புரை) மிக்க முகில்கள் தவழாநின்ற பொதிய
  மாமலையினது உச்சியிலமைந்த சந்தனமரச் சோலை தோறும்
  முற்படப் புகுந்து ஆங்கே உலாவிப் பின்னர், நீரூற்றுக்கள் பெருகுகின்ற
  நீரடைகரைகள் தோறும் உள்ள நாள் மலர்களை அசைத்து, அவற்றின்
  நறுமணத்தையும் முகந்து கொண்டு, மராமரத்தின் வெளிய மலர்களை மோதி
  அலைத்து வண்டுகள் தேன் பருகுமாறு மலர்வித்தும், நீலமணிபோன்ற
  நிறமமைந்த வாயையுடைய அழகிய கருங் குவளையினது மொட்டுக்களை
  மலர்வித்தும், ஒளியுடைய அழகிய காந்தண் மொட்டுக்களை அலைத்தும்,
  சந்தனமரத்தினது அழகிய குளிர்ந்த நறிய மலர்கள் விரியும்படி மலர்வித்தும்,
  இவையிற்றின் மணமெலாம் அளாவிக் கொண்டு, மேலும், நறிய
  கூதாளத்தினது நாள்மலர் மணத்தையும் அளாவிக்கொண்டு, குறிய
  தாளையுடைய குராமரத்தினது குவிந்த அரும்புகளை அலைத்தும், முல்லை
  மலரினது அகத்தேயுள்ள மணத்தையும் தேனையும் உண்டு, பல பிடாமரத்தினது
  குளிர்ந்த மலர்களையும் அணுகிப், பொன் மாலைபோன்று மலர்கின்ற
  கொன்றையினது நல்ல பூந்துகளையும் விரும்பிச் சேர்த்துக் கொண்டு,
  இவ்வாற்றான் நறுமணச் சாந்தியற்றும் தொழிலுடையோன், பல்வேறு மணப்
  பொருள்களையும் ஒருங்கே சேர்த்துச் செய்யும் செயலாலே அமைக்கப்பட்ட
  பலவாகிய உறுப்புக்களையும் தன்னுள்ளே அடக்கிக்கொண்டுள்ள பையினது
  உள்ளிடம் போலப் பல வேறு மணமும் ஒருங்கே கமழா நிற்ப, இரவு
  வருவதற்குக் காரணமான மாலைக் காலத்தே இமயமாகிய உயர்ந்த மலையிலே
  சென்று தங்குதற்கெழுந்த அழகிய குளிர்ந்த தென்றலே! தென்றலே! கேள், என்க
 
(விளக்கம்) தலைச்சென்றாடி-முற்படச் சென்றுலாவி, அசும்பு -
  நீருற்று, பசுந்தோடு-புதுப்பூ. உளரி-அசைத்து. சுள்ளி-மராமரம். சுரும்பு -வண்டு,
  முகை -அரும்பு. உள்ளமிழ்து - அகத்துள்ள மணமும் தேனும். சாத்துவினை -
  நறுமணச் சாந்து இயற்றும் தொழில். பையகம் போலக் கமழவென்க, எல் -இரவு,
  அல்குதல்- தங்குதல். தென்றால்; விளி.