பக்கம் எண் :

பக்கம் எண்:250

உரை
 
3. மகத காண்டம்
 
15. யாழ்நலந் தெரிந்தது
 
         
     55    பாவன கொடுப்ப மேவனன் விரும்பிக்
           கண்டே யுவந்து கொண்டதற் கியைய
           ஓர்த்தன னமைத்துப் போர்த்தனன் கொடுப்ப
           வணங்குபு கொண்டு மணங்கம ழோதி
           மாதர் கைவயிற் கொடுப்பக் காதல்
     60    உள்ளங் குளிர்ப்ப வூழி னியக்கக்
           கூடிய குருசில் பாடலின் மகிழ்ந்து
 
                 (இதுவுமது)
            55 - 61 ; மேவனன்,,,,,,,,,மகிழ்ந்து
 
(பொழிப்புரை) அந் நரம்பினைக் காண்டலும் உதயணன்
  பெரிதும் விரும்பி மகிழ்ந்து கைக்கொண்டு அந்த யாழிற்குப்
  பொருந்துமாறு அவற்றைக் கட்டி இசை எழுப்பிச் செவியால்
  கூர்ந்து அறிந்தவனாய் மீண்டும் அத் தோழியின்பால் நீட்ட
  அவள் தானும் வணங்கி ஏற்றுக்கொண்டு சென்று பதுமாபதி
  கையின்கட் கொடுப்ப அந் நங்கை தன் காதலால் உள்ளங்
  குளிர்ந்து முறைப்படி அந்த யாழினை இயக்காநிற்ப
  அதற்கேற்ப ஆண்டுச் சென்ற உதயணன் பாடுதலாலே
  இருவரும் மகிழ்ந்து என்க.
 
(விளக்கம்) மேவனன்-விரும்பியவனாய். கண்ட துணையானே
  உவந்து என்க. அதற்கு-அந்த யாழினுக்கு. வணங்குபு-வணங்கி.
  ஓதி-யாப்பியாயினி. மாதர்-பதுமாபதி காதலை உடை.ய உள்ளம்
  என்க. ஊழ்-முறைமை. குருசில்-உதயணன். இருவரும் மகிழ்ந்து
  என்க.