பக்கம் எண் :

பக்கம் எண்:254

உரை
 
3. மகத காண்டம்
 
16. பதுமாபதியைப் பிரிந்தது
 
           கலக்கமி றானைக் காசியர் கோமான்
           நலத்தகு தேவி நன்னாட் பெற்ற
     5     மின்னுறழ் சாயற் பொன்னுறழ் சுணங்கிற
           பண்ணுறு மின்சொற் பதுமா நங்கை
           ஆகந் தோய்தற் கவாஅ நெஞ்சமொடு
           பாசிழை நன்கலம் பரிச முந்துறீஇக்
           கேழ்கிளர் மணிமுடிக் கேகயத் தரசன்
     10     அளவி லாற்ற லச்சுவப் பெருமகன்
           மகதம் புகுந்து மன்னிய செங்கோற்
           றகைவெந் துப்பிற் றருசகற் கிசைப்ப
 
              (அச்சுவப் பெருமகன் வரவு)
                3-12; கலக்கம்.........இசைப்ப
 
(பொழிப்புரை) போர்க்களத்தே மனங் கலங்குதலில்லாத மறமிக்க
  படை களையுடைய காசி நகரத்து மன்னனுடைய அழகுமிக்க
  கோப்பெருந்தேவி நல்லதொரு முழுத்தத்திலே ஈன்றருளிய,
  மின்னலையொத்த சாயலையும். பொன்னினையொத்த சுணங்
  கினையும் பண்போன்று இனிய மொழிகளையும் உடைய பதுமாபதி
  நங்கையினுடைய மெய்யுறு புணர்ச்சி பெறுதற்கு வேணவாக்
  கொண்ட நெஞ்சத்தோடு நன்னிறம் ஒளிர்கின்ற மணிகள் பதித்த
  கோமுடியினையுடையவனும் கேகய நாட்டரசனும் அளவில்லாத
  ஆற்றலுடைய வனுமாகிய அச்சுவப்பெருமகன் என்பான் பதுமா
  பதிக்குப் பரிசப் பொருளாகப் பசிய ஆடையணிகலன்களை
  முன்னர் உய்த்துப்  பின்னர் மகதநாட்டின் தலைநகரத்தை யணுகித்
  தன் வரவினை நிலைபெற்ற செங்கோன்மையையும் பகைவரைத்
  தடை செய்தற்குரிய வெவ்விய படைவலிமையையும் உடைய
  தருசகனுக்குத் தன் தூதர் வாயிலாய் அறிவியா நிற்ப, என்க,
 
(விளக்கம்) தேவி-உதையையோடை. காசியரசன் தேவிமார்
  பலராகலின் கோமான் நலத்தகு தேவி பெற்ற என்றார், தேவி- ஈண்டுப்
  பட்டத்திற்குரிய கோப்பெருந்தேவி என்பதுபட நின்றது. சுணங்கு-தேமல்.
  பண்ணுறு-பண்போன்ற. பதுமா-பதுமாபதி. பரிசம்-முலைவிலை. கேழ்-நிறம்.
  கேகயம்-ஒரு நாடு. அச்சுவப் பெருமகன்;பெயர். தகை வெந்துப்பு :
  வினைத்தொகை.