பக்கம் எண் :

பக்கம் எண்:256

உரை
 
3. மகத காண்டம்
 
16. பதுமாபதியைப் பிரிந்தது
 
           போதுபிணைத் தன்ன மாதர் மழைக்கண்
           நன்றொடு புணர்ந்த நங்கை மணமகன்
           இன்றிவண் வருமென வில்லந் தோறும்
     20    எடுத்த பூங்கொடி யிருங்கண் விசும்பகம்
           துடைப்ப போல நடுக்கமொடு நுடங்கத்
           தேர்செலத் தேய்ந்த தெருவுக ளெல்லாம்
           நீர்செல் பேரியாறு  நிரந்திழிந் தாங்குப்
           பல்லோர் மொய்த்துச் செல்லிடம் பெறாஅ
 
                    (இதுவுமது)
              17-24; போது.........பெறாஅது
 
(பொழிப்புரை) நெய்தன் மலரை இரட்டையாகப் பிணைத்து
  வைத்தாற் போன்ற அழகிய குளிர்ந்த கண்களையுடைய
  வளும், கற்பு முதலிய பெண்மை நலத்தோடொன்றிய நம்
  பதுமாபதி நங்கைக்கு இற்றை நாள் இவண் மணமகன் வாரா
  நிற்கும் நன்னாளென்று மாந்தர் பெரிதும் மகிழ்ந்து தத்தம்
  மாளிகை தோறும் உயர்த்திய அழகிய கொடிகள் கரிய
  இடமகன்ற வானத்தைத் துடைத்துத் தூய்மை செய்வனபோல
  எங்கெங்கும் அசைந்து ஆடா நிற்பவும், தேர்கள் இயங்குதலாலே
  தேய்ந்துள்ள தெருக்களெல்லாவற்றினும், நீர் ஓடா நின்ற
  பேரியாறுகளிலே வெள்ளம் பரவி ஓடினாற்போலே பல
  மாந்தரும் நிரம்பி இயங்குதற்கிடம் பெறாமல் என்க.
 
(விளக்கம்) மாதர் - அழகு. மழைக்கண்-குளிர்ந்த கண்.
  நன்று- கற்புடைமை. நங்கை-பதுமாபதி. பின்னர் அச்சுவப்
  பெருமகனுக்குச் சாக்காடு நேர்தற்கு உற்பாதம் போன்று. நுடங்க
  என்னாது நடுக்கமொடு நுடங்க என்றார். நிரந்து - பரவி..