பக்கம் எண் :

பக்கம் எண்:26

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
         
     200    செவ்வழித் தீந்தொடை சிதைந்தன கிளவியென்
            எல்வளைத் தோளியை யெவ்வழி யானும்
            நாடிச் சென்றவள் சேடிள வனமுலைக்
            குழங்கற் சாந்திடைக் குளித்துவிளை யாடியென்
            அழுங்க னெஞ்சத் தயாஅநோய் தீர
     205    மயர்வெனை மாற்றுதி யாயி னின்மாட்
            டுயர்வுள வியற்கை யொழியுமோ வெனவும்
            இன்னவை பிறவு மன்னவை கண்டோர்
            அவல நெஞ்சமொ டறிவுபிறி தாகத்
            தவலருந் தேவியைத் தானினைந் தாற்றா
     210    திறுதி யெண்ணி யிகவா மன்னனை
 
                 (இதுவுமது)
          200 - 210 ; செவ்வழி ...........மன்னனை
 
(பொழிப்புரை) செவ்வழி என்னும் பண்ணினது இனிய
  இசைத்தொடை சிதைந்தவற்றை ஒத்த இனிமையுடைய சொற்களையுடைய
  என் ஆருயிர்க் காதலியாகிய ஒளி வளையணிந்த தோளையுடைய
  வாசவதத்தையை, நீ செல்லும் எல்லா வழிகளிடத்தும் குறிக்கொண்டு
  ஆராய்ந்து சென்று அவளைக் கண்டு, அவளுடைய பெரிய இளமையுடைய
  அழகிய முலைகளிடத்தே அணியப்பட்ட குழம்பாகிய சாந்தின் கண்ணே நீ
  நன்றாக முழுகி விளையாடி, அந்த நறுமணத்தோடே மீண்டும் என்பால் வந்து,
  அவலமுடைய என்னெஞ்சத்தின் வருத்தமாகிய நோய் தீரும்படி என்
  மயக்கத்தை மாற்றுவாயாயின் பண்டும் நின்பால் உயர்வாக மதிக்கப்படும்
  உன்னுடைய இயற்கைப் பண்பாகிய அருளுடைமை சிறப்பதே யன்றி ஒழிதலும்
  உண்டோ? என்னும், இவற்றையும் இவைபோல்வன பிறவற்றையும் கூறி அக்
  கூற்றுக்களைக் கேட்டு அவன் நிலைமையையும் கண்ட தோழர்கள் அறிவு
  கலங்கி மயங்கும்படி .தீதில்லாத தன் தேவியாகிய வாசவதத்தையை  நினைந்து
  துயரம் ஆற்றாமல் அவளது சாக்காட்டைக் கருதித் துயரத்தே மிக்குச் செல்கின்ற
  அவ்வுதயணனை என்க.
 
(விளக்கம்) செவ்வழி - ஒருவகைப் பண். அயா நோய் -
  வருத்தமாகிய நோய். மயர்வு-மயக்கம். இறுதி-வாசவதத்தையின் சாக்காடு.
  மன்னன் - உதயணன்.