பக்கம் எண் :

பக்கம் எண்:260

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           தகைமலர்ப் பைந்தார்த் தருசகன் றன்னொடு்
           பகைகொண் டொழுகும் பற்றாக் கொடுந்தொழில்
           விடுகணை விற்றொழில் விரிசிக னுள்ளிட்
      5    டலருந் தோற்றத் தரிமா னன்னவர்
           மத்தநல் யானை மதிய வெண்குடை
           வித்தக நறுந்தார் விலங்குநடைப் புரவி்
           அத்தின புரத்தி னரசரு ளரிமான்
           வேண்டியது முடிக்கும் வென்றித் தானை
      10    ஈண்டிய வாற்ற லெலிச்செவி யரசனும்
 
              (தருசகனுடைய பகை மன்னர்)
                2 - 10 : தகை.........அரசனும்
 
(பொழிப்புரை) அழகிய மலராற் புனைந்த பசிய மாலையையுடைய  தருசக மன்னனோடு பகைகொண்டு ஒழுகாநின்ற அன்பில்லாத கொடிய தொழில்களையும் கணைவிடும் விற்றொழிலையுமுடைய விரிசிகனை உள்ளிட்ட வெல்லுதற்கரிய தோற்றத்தையுடைய  சிங்கம் போன்றவரும் அரசருள்
வைத்து மத்தகத்தையுடைய  நல்ல யானையையும் திங்கள் போன்ற வெண்குடையையும் சித்திர வேலை செய்யப்பட்ட நறிய மாலையினையும் தாவிப் பாயும் நடையினையுமுடைய குதிரைகளை உடையவனும் அத்தினபுரத்தின் அரசருள் வைத்துச் சிங்கம் போன்றவனும் தான் விரும்பியதனைச்செய்து முடிக்கும் திறன் உடையவனும் வெற்றியையுடைய படைகளால் ஈண்டிய ஆற்றலையுடையவனும் ஆகிய எலிச்செவி அரசனும் ; என்க.
 
(விளக்கம்) தகை - அழகு. அடல் - வெல்லல். அரிமான் - சிங்கம். ஈண்டிய - செறிந்த.