பக்கம் எண் :

பக்கம் எண்:262

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           மலைத்தொகை யன்ன மையணி யானை
           இலைத்தார் மார்பி னேரணி தடக்கைப்
           பொருந்தா மன்னரைப் புறக்குடை கண்ட
     20    அருந்திறற் சூழ்ச்சி யடல்வேற் றானை
           அயிர்த்துணைப் பல்படை யயோத்தி யரசனும்
 
                    (இதுவுமது)
              17 - 21 : மலை.........அரசனும்
 
(பொழிப்புரை) மலைக் கூட்டம் போன்ற அஞ்சன மெழுதிய யானைக் கூட்டத்தையும் இலை விரவிய படலை மாலையணிந்த மார்பினையும், அழகிய அணிகலனணிந்த பெரிய கைகளையும் தன் பகை அரசர்களை முதுகுகண்ட வெல்லுதற்கரிய ஆற்றலையும், சூழ்ச்சியினையும் கொலை வேலேந்திய படையினையும் நுண்ணிய மணலின் அளவான பலவாகிய பிற படைகளையும் உடையவனும் ஆகிய அயோத்தி அரசனும்; என்க.
 
(விளக்கம்) மையணியானை - அஞ்சனமெழுதிய யானை. இலைத்தார்  - படலை மாலை. ஏரணி - அழகிய அணிகலன். புறக்குடை - முதுகு. அயிர் - நுண்மணல்.