பக்கம் எண் :

பக்கம் எண்:264

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           சீற்றத் துப்பிற் செருவெனப் புகலும்
           ஆற்றல் சான்ற வரசரு ளரிமாத்
           துன்னரு நீண்மதிற் றுவரா பதித்திறை
     30    மன்னரை முருக்கிய மதிய வெண்குடைப்
           பொங்குமலர் நறுந்தார்ச் சங்கர வரசனும்
 
                   (இதுவுமது)
              27 - 31 : சீற்ற.........அரசனும்
 
(பொழிப்புரை) வெகுளியையுடைய வலிமை மிக்க போர் என்று கூறிய அளவிலே பெரிதும் விரும்புகின்ற போராற்றல் நிரம்பிய அரசருள் வைத்துச் சிங்கம் போன்றவனும், பகைவர் கிட்டுதற்கரிய நீண்ட மதிலையுடைய துவராபதிக்கு அரசனும் பல்வேறு பகை மன்னரைக் கொன்ற கொற்றவெண்குடை உடையானும், மிக்க மலராற் புனைந்த நறிய மாலையை யணிந்த சங்கரவரசனும்;  என்க.

 
(விளக்கம்) போர் என்று சொல்லக்கேட்ட அளவிலே அத்தொழிலை  விரும்புவான் என்க. செரு - போர். புகலும் - விரும்பும். முருக்கிய - அழித்த.