பக்கம் எண் :

பக்கம் எண்:266

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           சங்க மாகி வெங்கணை வீக்கமொடு
           பகைநமக் காகிப் பணித்துத் திறைகொளும்
     40    மகத மன்னனை மதுகை வாட்டிப்
           புரிபல வியைந்த வொருபெருங் கயிற்றினிற்
           பெருவலி வேழம் பிணித்திசி னாஅங்
           கிசைந்த பொழுதே யிடங்கெட மேற்சென்
           றருந்திறன் மன்னனை நெருங்கின மாகித்
 
        (பகை மன்னர் ஆராய்தலும் போருக்கெழுதலும்)
                 38 - 44 : சங்கம்.........ஆகி
 
(பொழிப்புரை) பெருங் கூட்டமாகி இருந்து வெவ்விய அம்பினது பெருமையாலே நம்மனைவர்க்கும் பகைவனாகி நம்மை வணக்கி நம்பால் திறை கொள்ளாநின்ற மகதநாட்டு மன்னனாகிய தருசகனுடைய ஆற்றலை அழித்துப் பல புரிகளால் முறுக்கிய ஆற்றல் மிக்க ஒரு பெருங் கயிற்றாலே மிக்க வலிமையுடைய களிற்றி யானையைப் பிணித்தாற் போல நாம் அனைவரும் ஒருங்கே சேர்ந்த இப்பொழுதே அம்மன்னனுக்கு இடங் காலம் முதலியன கெடும்படி அவன்மேற் போருக்குச் சென்று வெல்லற்கரிய ஆற்றலையுடைய அத் தருசகனை யாம் அனைவரும் ஒருங்குகூடி நெருங்கி; என்க.
 
(விளக்கம்) சங்கம் - கூட்டம். வீக்கம் - பெருமை. பணித்து - வணக்கி. மதுகை - வலி. பல புரிகளைக்கொண்டு திரித்த பெருங்கயிற்றால் யானையைக் கட்டினாற்போல நம்மில் தனி ஒருவனால் வெல்லப்படாத  இத்தருசகனை நாம் ஒருங்கு கூடிப் பெரும்படையோடு பொருதால் வெல்லலாம் என்று துணிந்தவாறு. இடங்கெட - பகைவனுக்கு இடம் காலம் முதலியன கெடும்படி.