பக்கம் எண் :

பக்கம் எண்:267

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
         
     45    தன்னுடை யானையும் புரவியுந் தன்றுணைப்
           பொன்னியல் பாவையும் புனைமணித் தேரும்
           அணிகதிர் முத்தமு மருங்கல மாதியும்
           பணிமொழிச் செவ்வாய்க் கணிகை மகளிரொடு
           பிறவு மின்னவை முறைமையிற் றரினும்
     50    இருங்கண் மாதிரத் தொருங்குகண் கூடிய
           கருமுகில் கிழிக்குங் கடுவளி போலப்
           பொருமுரண் மன்னர் புணர்ப்பிடைப் பிரிக்கும்
           அறைபோக் கமைச்சின் முறைபோக் கெண்ணினும்
 
                     (இதுவுமது)
             45 - 53 : தன்னுடை.........எண்ணினும்
 
(பொழிப்புரை) யாம் இவ்வாறு ஒன்றுபட்ட செய்தியையறிந்த நம் பகை மன்னன் நம்மைப் பிரித்தற் பொருட்டு நம்முள் வைத்து ஒவ்வொருவரையும் தனித்தனியே அணுகித் தான் ஏறுகின்ற களிற்றியானை யையும் தான் ஏறுகின்ற குதிரையையும் தனது எடையுள்ள பொன்னாலியன்ற பாவையையும், ஒப்பனை செய்யப்பட்ட மணி புனைந்த தேரினையும், அழகிய ஒளி முத்துக்களையும் பேரணிகலன்களையும், இன்னோரன்ன பொருள்களோடு பணிந்த மொழியினையுடைய சிவந்த வாயையுடைய கணிகை மகளிரோடு இன்னோரன்ன பிறவும் முறைமையாலே வழங்கினும், அல்லது கரிய இடமுடைய வானத்தின்கண் ஓரிடத்தே குழுமிய கரிய முகில்களைச் சிதைத்தொழிக்கும் கடிய சூறைக் காற்றுப்போலப்  போராற்றல் மிக்க மன்னருடைய நட்பினைப் பிரிக்கின்ற கீழறுத்தல் செய்கின்ற அமைச்சரோடு ஆராய்ந்து நம்மைப் பிரித்துப் போக்கற்கு முறையே நினைத்தாலும்; என்க.
 
(விளக்கம்) தன்னுடை யானை - தான் விரும்பி ஏறும் யானை. தன்றுணைப் பொன்னியல் பாவை - தன் எடையுள்ள பொன்னாற் செய்யப்பட்ட பாவை என்க. அருங்கலம் - பெறற்கரிய பேரணிகலம். வளி - காற்று. அறைபோக்கு அமைச்சின் - கீழறுத்தல் செய்கின்ற அமைச்சரோடு.