பக்கம் எண் :

பக்கம் எண்:268

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           அங்கண் ஞாலத் தழகுவீற் றிருந்த
     55    கொங்கலர் கோதை யெங்கையைப் பொருளொடு
           தனக்கே தருகுவன் சினத்தி னீங்கி
           ஊனங் கொள்ளாது தானவட் பெறுகெனத்
           தேறு மாந்தரை வேறவண் விடுத்துத்
           தனித்தர வொருவரைத் தன்பாற் றாழ்ப்பினும்
 
                      (இதுவுமது)
             54 - 59 : அங்கண்.........தாழ்ப்பினும்
 
(பொழிப்புரை) அழகிய இடமமைந்த இவ்வுலகின்கண் அழகுத்தெய்வம் குடியிருந்த மணத்தோடு மலர்ந்த மாலையை யணிந்த என் தங்கை யாகிய பதுமாபதியை நிறைந்த வரிசைப் பொருள்களோடே  உனக்கே மணம் செய்து தருவேன். நீ என்மேல் கொண்ட வெகுளியை விடுத்துச் சிறுமை கொள்ளாமல் அவளை வாழ்க்கைத் துணையாகப் பெறுக, என்று கூறி அவ்விடத்தே அவன் மொழியைத் தெளிகின்றவரை நம்மினின்றும் பிரித்து வேறாக்கிவிட்டு நம்முள் வைத்து யாரேனும் ஒருவரைத் தனித்துத் தன்னோடு இருத்திக் கொள்ளினும்; என்க.
 
(விளக்கம்) அங்கண் - அழகிய இடம். கொங்கு - மணம்; தேனுமாம். எங்கை - என் தங்கை, என்றது பதுமாபதியை. பொருள் -  சீதனப் பொருள். அவள் : பதுமாபதி. இத்தகைய பகைவன் மொழியை நம்மில் ஒருவரும் தெளியார். ஒரோவழி தெளிவார் உளராயின் என்பான், தேறுமாந்தரை என்றான். தனித்தர - தனிப்ப; யாரேனும் ஒருவரை என்க. தாழப்பினும் - தங்கும்படி செய்யினும்.