பக்கம் எண் :

பக்கம் எண்:272

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           உகவை யுள்ளமொடு பகையிவ ணியைதல்
           கரும நமக்கென வுருமண் ணுவாவுரைத்
     80    தின்ன தென்னான் பொன்னேர் தோழிக்
           கிருமதி நாளகத் திலங்கிழை மாதர்
           பருவரல் வெந்நோய் பசப்பொடு நீக்குவென்
           என்றன னென்பதைச் சென்றனை கூறிக்
           கவற்சி நீக்கெனப் பெயர்த்தவட் போக்கிக்
 
                (உருமண்ணுவாவின் செயல்)
              78 - 84 : உகவை ......... போக்கி
 
(பொழிப்புரை) அப்பொழுது அவ்விடத்தே உதயணனுடனிருந்த உருமண்ணுவா ஊக்கத்தால் கிளர்ந்த நெஞ்சத்தோடு இப்பொழுது இங்குப் பகைவர் வந்து சேர்தல் நமக்கு நல்ல காரியமேயாகும் என்று கூறி அதற்குக் காரணம் கூறானாய்ப் பொன்போன்ற நிறமுடைய தோழியாகிய அயிராபதியை நோக்கி, 'நங்காய்! மாணகன் இரண்டு திங்களுக்குள்ளே பதுமாபதியின் பால் வந்து அப்பெருமாட்டியினது பிரிவுத் துன்பமாகிய கொடிய பிணியைப் பசப்போடு நீக்குவன், என்று கூறினன் என்பதை நீ சென்று அக்கோமகட்குக் கூறி அவளுடைய கவலையை அகற்றுவாயாக' என்று பணித்து மீண்டும் அவளை அவள்பால் போக்குவித்து; என்க.
 
(விளக்கம்) உகவை - உயர்ச்சி; மகிழ்ச்சியுமாம். இவண் - இச்செவ்வியில். நமக்குக் கருமம் - நமக்கு நல்ல காரியமாகும். பொன் - திருமகளுமாம். இலங்கிழை மாதர் : பதுமாபதி; பருவரலாகிய வெந்நோய் என்க. கவற்சி - கவலை.