பக்கம் எண் :

பக்கம் எண்:273

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
         
     85    கடுத்த மன்னரைக் கலங்கத் தாக்கி
           உடைத்த பின்றை யல்லது நங்கையை
           அடுத்தல் செல்லா னரச னாதலின்
           அற்ற நோக்கி யவர்படை யணுகி
           ஒற்றி மேல்வீழ்ந் துடைக்கு முபாயமா
     90    வாணிக வுருவின மாகி மற்றவர்
           ஆணத் தானை யகம்புக் காராய்ந்
           திரவிடை யெறிந்து பொருபடை யோட்டிக்
 
                     (இதுவுமது)
              85 - 92 : கடுத்த ......... ஓட்டி
 
(பொழிப்புரை) அக் கூன்மகள் போன பின்னர் அவ்வமைச்சன் உதயணனை இனிதின் நோக்கி, ''எம்பெருமானே! இப்பொழுது இராசகிரியத்தைச் சூழ்ந்துள்ள பகை மன்னர்களை மனங்கலங்கும்படி போர் செய்து அவர்களை முதுகுகண்டபின் அல்லது பதுமாபதியின் திறத்திலே தருசக மன்னன் மனம் செலுத்துதல் இலனாவான். அங்ஙனமாதலின் நாம் அப் பகை மன்னர் தம் சோர்வினை ஒற்றியறிந்து அவர் படைகளை நெருங்கிச் செவ்வி நோக்கி அவர் மேலே போர் தொடுத்து அவரை உடைந்து ஓடச் செய்தற்கு ஓர் உபாயமாக நாமெல்லாம் வணிகர் வேடந் தாங்கி அப் பகைவருடைய அன்பிற்குரிய படைக்குள்ளே புகுந்து அவர் தம் இயல்புகளை ஆராய்ந்து இரவிலேயே அவர்களைத் தாக்கி அவர்கள் போர் செய்தற்குக் கூட்டி வந்துள்ள படைகளை யெல்லாம் புறங்காட்டி ஓடச் செய்து; என்க.
 
(விளக்கம்) கடுத்த மன்னர் - பகை மன்னர். நங்கையை : பதுமாபதியை. அரசன் : தருசகன். தருசகமன்னன் இப்பொழுது தன்மேல் வந்துள்ள பகைமன்னரைப் புறங்கண்டன்றிப் பதுமாபதியின் திருமணம்பற்றிப் பேச அவளை அணுகமாட்டான் என்பது கருத்து. அற்றம் - சோர்வு. உபாயமா : ஈறு கெட்டது. ஆணத்தானை - அன்பிற்குரிய படை. எறிந்து - தாக்கி.