பக்கம் எண் :

பக்கம் எண்:274

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           கேட்போர்க் கெல்லாம் வாட்போர் வலித்தொழில்
           வளமிகு தானை வத்தவர்க் கிறையைக்
     95    கிளைமை கூறி யுளமை கொளீஇக்
           காவினு ணிகழ்ந்தது காவலற் குரைப்பின்
           மன்றல் கருதி வந்த மன்னற்
           கொன்றுபு கொடாமை யுண்டு மாகும்
 
                     (இதுவுமது)
             93 - 98 : கேட்போர்க்கு ......... ஆகும்
 
(பொழிப்புரை) அப் பகைவர் புறங்காட்டி ஓடிய பின்னர் நம்மை வினவுவோர்க்கெல்லாம் வாட் போராகிய வலிமை மிக்க தொழிலையுடைய வளமிக்க படைகளையுடைய வத்தவ நாட்டு மன்னனாகிய உனக்கும் அத் தருசகனுக்கும் பண்டுள்ள உறவு முறைமையும் எடுத்துக் கூறி அவ் வத்தவ மன்னன் இங்கிருக்கின்றான் என்னும் செய்தியையும் அவர் மனங்கொள்ளக் கூறிப் பின்னர்க் காமக்கோட்டத்தின் சோலையின்கண் நிகழ்ந்த உங்கள் களவொழுக்கத்தையும் அத் தருசக மன்னவனுக்குக் கூறுவிப்பேமாயின் அதுகேட்ட பின்னர் இப்பொழுது அப் பதுமாபதியை மணம் செய்துகொள்ளுதலைக் கருதி இந் நகரத்தில் வந்துள்ள அச்சுவப் பெருமகனுக்கு அத் தருசகன் மனமொன்றி அவளைக் கொடாதிருத்தலுங் கூடும்; என்க.
 
(விளக்கம்) வத்தவர்க்கிறையை : முன்னிலைப்புறமொழி. கிளைமை - உறவுமுறைமை. உளமை - இருக்குந்தன்மை. மன்றல் - திருமணம். வந்த மன்னற்கு - அச்சுவப் பெருமகனுக்கு. ஒன்றுபு - ஒன்றி. உண்டுமாகும் : உண்டாகும். உண்டு, உண்டும் என வருதலை, ''காரிய, முண்டு மாங்கொல்'' (2. 11 : 167-8) ''இல்லை என்னீருண்டு மென்னீர்'' (தேவா. சுந்தர. திருவோணகாந்தன்றளி.)