பக்கம் எண் :

பக்கம் எண்:275

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           ஒன்றின னாயிற் பொன்றுஞ் சின்முலைத்
     100    தெரியிழை மாத ருரிமையி னோடாள்
           அன்ன தாத லொருதலை யதனாற்
           பின்னரு மதற்குப் பிறபிற நாடுதும்
           இன்னே யெழுகென் றெழுந்தாங் கணைஇச்
           சின்னச் சோலை யென்னு மலைமிசைப்
     105    பன்னற் கேள்வி பண்வரப் பாடிட
 
                     (இதுவுமது)
              99 - 105 : ஒன்றினன் ......... பாடிட
 
(பொழிப்புரை) ''பெருமானே! ஒரோவழி அத் தருசக மன்னன் அந்த அச்சுவப் பெருமகனுக்குப் பதுமாபதியை வழங்குதற்கு உடன்படுவானா யினும் பொற்றேமல் கிடக்கும் இள முலையினையும் ஆராய்ந்தணிந்த அணிகலன்களையுமுடைய அப்பதுமாபதி நங்கை அவ்வச்சுவப் பெரு மகனோடு அவனுக்கு மனைவியாகி அவனோடு செல்லாள், அங்ஙன மாவது ஒருதலை. ஆதலால் அதன் பிற்பாடு அத் திருமணச் செய்தி பற்றி வேறு வேறு ஆராய்ச்சிகள் செய்வோம், அதுகிடக்க, இப்பொழுதே அப் பகை மன்னரை வெல்லுதற்கு எழுக'' என்று கூறி அவ்விருவரும் எழுந்து அங்கே சென்று அவ்விடத்தே சின்னச் சோலை என்னும் பெயரையுடைய ஒரு மலையின் மேல் ஏறி இருந்து ஆராய்ச்சியுடைய  கேள்விச் செல்வமாகிய ஒரு பண்ணைத் தங்கேளிர்கள் வரும் பொருட்டுப் பாடா நிற்ப; என்க.
 
(விளக்கம்) ஒரோவழி ஒன்றினனாயின் என்க. பொன் - பொன் போலும் தேமல்; அழகுமாம். மாதர் : பதுமாபதி. உரிமையின் -  மனைவியாக. ஓடாள் - செல்லாள். சின்னச்சோலை - ஒரு மலையின் பெயர். பன்னல் - ஆராய்தல். கேள்வியாகிய பண் என்க.