பக்கம் எண் :

பக்கம் எண்:276

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           எண்ணிய கருமத் திடையூ றின்மை
           திண்ணிதிற் கேட்டுத் தெளிந்தன ராகி
           ஆனா வன்பொடு மேனா ளன்றி
           வழிவழி வந்த கழிபெருங் காதற்
     110    பகையடு படைநரைத் தொகையவட் காண்புழி
           நூற்றிற முற்றி யாற்றுளி பிழையா
           தாற்றி னறிய வத்துணை யுண்மையின்
           ஊறின் றினியென வுவகையிற் கழுமிக
 
                    (தோழர் செயல்)
              106 - 113 : எண்ணிய ......... கழுமி
 
(பொழிப்புரை) அப் பண்ணொலி கேட்ட உதயணனுடைய தோழர்களெல்லாம் தாங்கள் வந்துள்ள காரியத்திற்கு இடையூறு ஏதும் இல்லாமையை அப் பண்ணைத் திட்பமாகக் கேட்டலாலே தெளிந்து கொண்டவராய்க் குறையாத அன்போடும் முன்னாளிலல்லது  வழி வழியாக வந்த மிகப்பெரிய அன்போடு பகைவர்களை வெல்லுகின்ற அத் தொல் படை மறவர்கள் அவ்விடத்தே வந்து குழுமியபொழுது அவர்களுடைய தொகையை எண்ணிக் காணுங்கால் அரசியல் நூலினது இயல்பினைப் பயின்று முதிர்ந்து கூறும் வழி பிழையாமல் எண்ணிக் கண்டபோது அந்த அளவு குறையாதிருத்தலாலே இனி நமக்குத் தீதொன்றுமில்லை  என்று மகிழ்ச்சியால் நிரம்பி; என்க.
 
(விளக்கம்) எண்ணிய கருமம் - தருசகனை நட்புக்கோடல். ஆனா வன்பு  - குறையாத அன்பு. கழிபெருங் காதல் - மிகுபேரன்பு. படைநர் - மறவர். ஆற்றுளி - வழிப்படி. அத்துணை - அவ்வளவு. ஊறு - இடையூறு. கழுமி - நிரம்பி.