பக்கம் எண் :

பக்கம் எண்:277

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           கரப்பில் வண்மைப் பிரச்சோ தனன்றன்
     115    சினப்படை யழித்த செம்ம லாளர்க்குக்
           கனப்படை காக்கைத் தொகையெனக் கருதும்
           அத்திறத் தொன்றி யெத்திறத் தானும்
           குவளை யுண்க ணிவளொடு புணர்ந்த
           காலை யல்லது கோலக் குருசில்
     120    புலம்பிற் றீரா னாதலிற் பொருபடை
           கலங்கவாட் டுதலெனக் கருத்திடை வலித்து
 
                    (இதுவுமது)
             114 - 121 : கரப்பில் ......... வலித்து
 
(பொழிப்புரை) இரவலற்குக் கரவாது வழ.ங்கும் வள்ளன்மையுடைய பிரச்சோதன மன்னனுடைய வெகுளிமிக்க படையினை எளிதில் அழித்த தலைமைத் தன்மையுடைய நம்முடைய மறவர்களுக்கு  இப்பகைவரது பெரிய படையானது காக்கைக் கூட்டமேயாகும் என்று நினைத்தற்குரிய அத்தகையதொரு சூழ்ச்சியோடே பொருந்தி எவ்வாற்றானும் குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய இப் பதுமாபதியோடு புணர்ந்த காலத்து அல்லது அழகுடைய நம் மன்னர் பெருமான் துன்பத்தினின்றும் அகலான் ஆதலாலே போர்க்கு வந்துள்ள இப் பகைப் படை கலங்கி ஓடும்படி தாக்குவோமாக என்று உள்ளத்திலே துணிந்து; என்க.
 
(விளக்கம்) செம்மலாளர் - தலைமைத் தன்மையுடைய மறவர். கனபடை - பகைவருடைய பெரிய படை. இரவிற் போர் செய்யக் கருதினமையின் பகைவர் காக்கைத்தொகை எனப்பட்டார். இதனால் இவர்கள் தம்மைக் கூகைப் படையோடு உவமித்துக்கொண்டனர். இஃது ஏகதேச உருவகம் :

           ''பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
           வேந்தர்க்கு வேண்டும் பொழுது''

என்னும் திருக்குறளையும் நினைக; (குறள் - 481). இன்னும் களப்படை காக்கைத்தொகை என்ற இஃது, ''ஆயிரங் காக்கைக்கு ஒரு கல்'' என்னும் பழமொழி பற்றி அப் பகைப் படையின் எளிமை குறித்து நிற்றலுங் காண்க. அத்திறத்து - அத்தகைய சூழ்ச்சியோடு. இவள் : பதுமாபதி. குருசில் : உதயணன். புலம்பு - துன்பம். வாட்டுதல் - வாட்டுவேம். வலித்து - துணிந்து.