பக்கம் எண் :

பக்கம் எண்:284

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           மகரிகை நிறைய வெகிர்முக மாக்கிப்
           பாடி மகளிர் விழையுஞ் சேடொளிப்
           பத்திக் கடிப்பும் பவழத் திரியும்
           முத்து வடமு முழுமணிக் காசும்
     165    பன்மணித் தாலியு மென்முலைக் கச்சும்
           உத்திப் பூணு முளப்படப் பிறவும்
           சித்திரக் கிழியின் வித்தக மாகத்
           தோன்றத் தூக்கி யாங்கவை யமைத்து
           நாற்றிய கைய ரேற்றிய கோலமொடு
 
                    (மகளிர்க்குரியவை)
               161 - 169 : மகரிகை.........கையர்
 
(பொழிப்புரை) மகரமீன் வடிவமாகச் செய்த பேழையைத் திறந்து இரு பக்கத்து மூடிகளினும் அப்பகை மன்னர் பாசறையிலுள்ள மகளிர்கள் விரும்புதற்குரிய பேரொளி படைத்த பத்திக் கடிப்பும், பவழத் திரியும், முத்துவடமும், முழுமணிக் காசும், பலவாகிய மணிகள் பதிக்கப் பெற்ற தாழியும், மெல்லிய முலைக்கச்சும்  உத்தியணியும், உள்ளிட்ட இன்னோ ரன்ன பிற அணிகலன்களும்  ஓவியப்படாத்தில் அழகாகத் தோன்றும்படி தூங்கவிட்டு அவற்றை ஏந்தித் தூங்கவிட்ட கையினை உடையராய்;என்க.
 
(விளக்கம்) மகரிகை - மகரமீன் வடிவமாகச் செய்யப்பட்ட ஒரு வகைப் பேழை. சமமான மூடியுள்ள அப் பேழையைத் திறந்து வெளிப்பட அம் மூடிகளின்கண் பத்திக் கடிப்பு முதலிய அணிகலன்களைத் தூக்கி இருந்தனர் என்பது கருத்து. சித்திரக்கிழி - ஓவியம் எழுதப்பட்ட படாம். அப்பேழையைத் தூங்கவிட்டுப் பற்றிய கையையுடையர் என்க.