பக்கம் எண் :

பக்கம் எண்:285

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           நாற்றிய கைய ரேற்றிய கோலமொடு
     170    நுரைவிரித் தன்ன நுண்ணூற் கலிங்கம்
           அரைவிரித் தசைத்த வம்பூங் கச்சொடு
           போர்ப்புறு மீக்கோள் யாப்புறுத் தசைஇப்
           பொற்றொடி நிறைக்கோல் பற்றிய கையினர்
           கழலுங் கச்சுங் கலிங்கமு மற்றவர்
     175    விழைவன வறிந்து வேறுவே றடக்கிக்
 
                     (இதுவுமது)
              169 - 175 : ஏற்றிய ......... அடக்கி
 
(பொழிப்புரை) நூலிழையாலே பல்வேறு வகைக் கோலம் அமைய ஏற்றப்பட்டனவும், நுரையை விரித்தாற் போன்றனவும், நுண்ணிய நூலால் நெய்யப்பட்டனவும் ஆகிய ஆடைகளையும், இடையின்கண் விரித்துக் கட்டிய அழகிய பூவேலை செய்த கச்சுக்களையும் போர்த்துக் கட்டும் மேற் போர்வையினுள் வைத்துக் கட்டாகக் கட்டிக்கொண்டு, பொன்னணிகலனும் அவற்றை நிறுக்கும் துலாக்கோலும் பற்றிய கையையுடை யராய், இன்னும் கழலும் கச்சும் கலிங்கமும் இன்னோரன்ன பிறவும் அம் மகளிர் விரும்பும் இயல்புடையவற்றைத் தனித்தனியாக ஆராய்ந்து அடக்கி வைத்துக் கொண்டும்; என்க.
 
(விளக்கம்) கோலம் - பூங்கொடி மலர் முதலியன அமையச் செய்யும் நூலாலியற்றிய பல்வகை ஓவியங்கள். நுரை - நீரின் நுரை. அரை - இடை. மீக்கோள் - போர்வை. பொற்றொடி - பொன்வளையல். நிறைக் கோல் - துலாக்கோல். அவர் : அம்மகளிர்.