உரை |
|
3. மகத காண்டம் |
|
2. மகதநாடு புக்கது |
|
விரிகதிர்த் திங்கள் வெண்குடை யாக
ஒருவயிற் கவித்த லுற்ற வேந்தற்
10 கருமை யமைச்சர் பெருமலை
யேறிக் கொண்டியாந்
தருதுங் கண்டனை தெளிகென
நண்புணத் தெளித்த நாடகம்
போலப் படைச்சொற்
பாசத் தொடக்குள் ளுறீஇக்
கலாவேற் குருசில் விலாவணை யோம்பி
|
|
(இதுவுமது)
8 - 14 : விரி............ஓம்பி
|
|
(பொழிப்புரை) விரிந்த
ஒளியையுடைய நிறைநாட்டிங்கள் மண்டிலத்தைத் தனக்கு வெண்கொற்றக்
குடையாக்கித் தன் அரசுகட்டிலின்மேல் மட்டும் கவித்து வைத்துக் கோடற்கு
வருந்திய பேதையாகிய வேந்தன் ஒருவனுக்கு அவனுடைய அருமதி அமைச்சர்
'வேந்தே! யாங்கள் இமயமலையினுச்சியிலேறி அத்திங்கள் மண்டிலத்தைக்
கைப்பற்றிக் கொணர்ந்து நினக்குத் தருவேங் காண்! தெளிவாயாக!' என்று
தங்கள் நட்பின் சிறப்பினை அம்மன்னன் சுவைத்து மகிழும்படி தேற்றிய தொரு
நாடக நிகழ்ச்சிபோலவே இத்தோழரும் தங்கள் படைத்து மொழியாகிய
கயிற்றாலே போரிற்சிறந்த வெற்றிவேலையுடைய அவ்வுதயணனைக் கட்டித்
தம் வழிப்படுத்து அவனது அழுகையை அகற்றிப் பாதுகாத்து என்க.
|
|
(விளக்கம்) திங்களைக்
குடையாக்கிக் கொள்ள விரும்பிய அரசனுக்கு அவனமைச்சர் யாங்கள் மலையேறி
அதனைக் கைப்பற்றி வருகி றோம், வருந்தற்க என்று நடித்த நாடகம் இறந்த
வாசவதத்தையை மீண்டும் மனைவியாக்கிக் கொள்ள விரும்பி வருந்தும்
உதயணனுக்கு அவளை மீட்டுத் தருவதாக அழைத்தேகும் அமைச்சருடைய
நாடகத்திற்குவமை என்க; இவ்வுவமையும் ஓர் அழகிய படைத்து மொழியே
போலும்; ஒரோ வழி ஆசிரியர் காலத்தே இங்ஙனம் ஒரு கதையையுடைய நாடகம்
நடிக்கப்பட்டிருத்தலும் கூடும் என்க.
நட்புண -தம் நட்பை விரும்புமாறு. படைச் சொல் - படைத்து
மொழி. கலாவேல் - போரிற் சிறந்தவேல்.
விலாவணை-அழுகை.
|