பக்கம் எண் :

பக்கம் எண்:300

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
            எம்வயி னெம்வயி னெண்ணினர் கோளெனத்
            தம்வயிற் றம்முளுந் தெளியா ராகிப்
            பாடி யருங்கலம் பட்டுழிக் கிடப்ப
            நீடிரு ளகத்து நீங்குதல் பொருளெனச்
     260    செவிசெவி யறியாச் செயலின ராகித்
            தவிர்வில் வேகமொடு தலைவந் திறுத்த
            கடுந்தொழின் மன்ன ருடைந்தன ரோடி
            அடைந்தனர் மாதோ வரணமை மலையென்.
 
                     (இதுவுமது)
               256 - 263 : எம்.........என்
 
(பொழிப்புரை) எம்முள்ளேயே எம்மிடத்து இங்ஙனம் ஒரு சூழ்ச்சியைச் செய்தார் உளர்போலும் என்று நினைத்துத் தங்களிடத்தும் அங்ஙனம் செய்வார் யார்? எனத் தெளியாதவராய்ப் பாசறையும் அரிய படைக்கலங்களும் அப்போர்க்களத்திலே கிடக்க விட்டு நீண்ட இந்த இருளினூடேயே ஓடிவிடுதல் நமக்கு உறுதியாம்என்று ஒவ்வொருவரும் தமக்குள்ளே கருதிக் கொண்டு பிறர் பிறர் செவிகளுக்கு அறியப்படாத செய்கையை உடையராய் அவ்விடத்தே முன்னர்ப் போர் செய்தற்கு வந்து தங்கிய கடுந் தொழிலையுடைய அப்பகை மன்னர் அனைவரும் தோல்வியெய்திக் குறையாத வேகத்தோடு ஓடித் தங்களுக்கு அரணாக அமைவ தற்குரிய மலை முழைஞ்சுகளிலே சென்று புகுந்து மறைந்தனர் ; என்க.
 
(விளக்கம்) கபாடியும் அருங்கலமும் என்க. அருங்கலம் - அரிய படைக் கலங்கள். பொருள் - உறுதிச் செயல் ; பிறர் பிறர் செவியில் அறி விக்கப்படாத செயல் என்க. கடுந்தொழின் மன்னர் என்றது இகழ்ச்சி. அரணாக அமைதற்குத் தகுந்த மலை முழைஞ்சு என்க.

                    17. இரவெழுந்தது முற்றிற்று.