உரை |
|
3. மகத காண்டம் |
|
18. தருசகனோடு கூடியது |
|
ஆளூறு படாமைக் கோளூறு
புரிந்த செம்ம
லாளர் தம்முட் கூடி 5 ஒன்னா
மன்னரை யோட்டின மாதலின்
மின்னேர் சாயலை மேயநம்
பெருமகற் காக்க
முண்டெனுஞ் சூழ்ச்சியோ டொருபாற்
புலர்ந்த காலை மலர்ந்தவ
ணணுகிக் களங்கரை
கண்டு துளங்குபு வருவோர்
|
|
(தோழர்
செயல்)
3 - 9 : ஆள்.........வருவோர்
|
|
(பொழிப்புரை) இனித் தம் மறவர்களுள் ஒருவனேனும் புண்படாதபடி பகைவர் கொள்கைக்கு இடையூறு
செய்த தலைமைத் தன்மையுடைய உதயணனுடைய மறவர்கள் முன்னர்க் குறிப்பிட்ட இடத்திலே
வந்து கூடித் தம்முள் யாம் பகை மன்னர்களை எளிதாக ஓட்டி விட்டேம்; ஆதலாலே மின்
போன்ற சாயலையுடைய பதுமாபதியை விரும்பிய நம் பெருமானுக்கு இனி
இச்செயலால் ஆக்கமுண்டாதல் ஒருதலை என்று ஆராய்ந்து தெளிந்தவராய் அற்றை இரவு
புலர்ந்த விடியற்காலத்தே முகமலர்ந்தவராய் அப் பாசறை இருப்பினை அணுகி அப்
போர்க்களத்தின் எல்லையைக் கண்டு மனந் துணுக்குற்று வாரா நின்ற உருமண்ணுவா
முதலியோர்; என்க.
|
|
(விளக்கம்) ஆள் ஊறு
படாமை - ஆள் தம்முடைய மறவர்களுள் வைத்து ஓராள்தானும் புண்படாமல் என்க. இதற்கு,
''பகைவரைச் சார்ந்தவர்களுள் ஓராளும் புண்படாதபடி'' என்று உரை கூறி இதற்கு எடுத்துக்
காட்டாக, ''ஆளற்றமின்றி யலர்தாரவன் றோழரோடும் கோளுற்ற கோவனிரை
மீட்டவன்''சீவக. 455) என்னும் சிந்தாமணிப் பகுதியைக் காட்டினாருமுளர். இவ்வுரை
பொருந்தாமை, ''்ளரைத்தபுத் துயிருண்டும்''236) ''்கலரெறிந்தும்''242)
''வரை......நூறி''246-7) எனவும் வருவனவற்றால் அறிக. செம்மலாளர் - தலைமையையுடைய
மறவர். ஒன்னா மன்னர் - பகை மன்னர். சாயலை : பதுமாபதியை. முகமலர்ந்து என்க.
களங்கரை கண்டு - போர்க்களத்தின் எல்லையைக் கண்டு. துளங்குபு - துளங்கி, தாம்
செய்த கொலைத் தொழிலைக் கண்டு தாமே நடுங்கினர் என்பது கருத்து; வருவோர் -
உருமண்ணுவா முதலியோர்.
|