பக்கம் எண் :

பக்கம் எண்:303

உரை
 
3. மகத காண்டம்
 
18. தருசகனோடு கூடியது
 
         
      10    மகத மன்னற் குகவை யாகக்
           கோடாச் செங்கோற் குருகுலத் தரசன்
           ஓடாக் கழற்கா லுதயண குமரன்
           கோயில் வேவினு ளாய்வளைப் பணைத்தோட்
           டேவி வீயத் தீரா வவலமொடு
      15    தன்னா டகன்று பன்னாடு படர்ந்து
           புலம்பிவட் டீர்ந்து போகிய போந்தோன்
 
                  (இதுவுமது)
              10 - 16 : மகத.........போந்தோன்
 
(பொழிப்புரை) வயந்தகனை நோக்கி, ''்பனே! நீ சென்று இம் மகத நாட்டு மன்னனாகிய தருசகனுக்கு உயர்வுண்டாகும் பொருட்டு வளையாத செங்கோலையுடைய குருகுலத்துள் தோன்றிய  அரசனாகிய போர்க்களத்தே பிறக்கிடாத வீரக் கழலையுடைய காலையுடைய உதயண குமரன் தனது அரண்மனை தீப்பற்றி வெந்த காலத்தே அத் தீயினுளகப்பட்டுத் தன்னுடைய அழகிய வளையலணிந்த மூங்கில் போன்ற தோள்களையுடைய கோப்பெருந் தேவியாகிய வாசவதத்தையார் இறந்துபட்டமையாலே தீராத துன்பத்தோடு தனது வத்தவ நாட்டினின்றும் புறப்பட்டுப் பல்வேறு நாடுகளிலும் யாத்திரை செய்து தனது துன்பத்தை இந்நாட்டின்கண் தீர்த்துக் கோடற்கு வந்தவன்''ன்க.
 
(விளக்கம்) மகத மன்னன் : தருசகன். உகவை - மகிழ்ச்சியுமாம்.  குருகுலம் - ஐவகைக் குலத்துள் ஒன்று. உதயணன் பிறந்த குலம். கோயில் வேவு - பெயர். தேவி : வாசவதத்தை. வீய - இறந்துபட. அவலம் - துன்பம். புலம்பு; இவண் - இந்த நகரில் எனினுமாம். போந்தோன் : பெயர்.