பக்கம் எண் :

பக்கம் எண்:309

உரை
 
3. மகத காண்டம்
 
18. தருசகனோடு கூடியது
 
           
     50    அருகர் மாற்ற மங்கையி னவித்துக்
           கேட்குஞ் செவ்வி நோக்கம் வேட்ப
           இருபெரு மன்ன ரிறைவருந் தம்முள்
           ஒருபெருங் கிழமை யுண்மை யுணர்த்தலும்
           வயந்தகன் வாயது நிற்க வுயர்ந்த
     55    நண்பே யன்றி நம்மொடு புணர்ந்த
           கண்போற் கிழமைக் கலப்பு முண்டெனத்
           தானை நாப்பட் டானெடுத் துரைத்து
 
                    (இதுவுமது)
              50 - 57 : அருகர்.........உரைத்து
 
(பொழிப்புரை) அண்மையிலுள்ள மாந்தரின் பேச்சாரவாரத்தை அம் மன்னவன் தனது அழகிய கையினாலடக்கி அவ் வயந்தகனது மொழியைத் தான் கேட்கும் செவ்வியையுடைய குறிப்புடைய நோக்கத்தோடு அவ்வயந்தகனை விரும்பி நோக்கா நிற்ப, அங்ஙனம் செவ்விபெற்ற அவ் வயந்தகனும் அவ்வரசனை வணங்கி அத் தருசக மன்னனும் உதயண மன்னனுமாகிய இரு பெருவேந்தர்களுடைய தந்தைமார் இருவரும் பண்டு தம்முட் கொண்டிருந்த ஒப்பற்ற பெரிய நட்புரிமையை எடுத்துக் கூறுதலும்,  அதுகேட்ட அத் தருசக மன்னனும் மகிழ்ந்து ஆங்கு நின்ற தன் தானைத்தலைவரை நோக்கி, ''்புடையீர் ! இவ்வயந்தகன்  ஈண்டு எடுத்துக் கூறிய மெய்ம்மொழி நிற்க, இங்ஙனம் உயர்ந்த நட்புரிமை மட்டுமேயன்றி அவ்வுதயண மன்னன் முன்னோர்  நம் முன்னோரோடு கலந்த கண்போன்ற உறவுரிமையும் உண்டு''ன்று அவர் நடுவே தானே எடுத்துக் காட்டி; என்க.
 
(விளக்கம்) அருகர் - அண்மையிலுள்ளோர். இருபெரு மன்னர் - உதயணனும் தருசகனும். இறைவர் - தந்தைமார். வாயது - வாய்மொழி. கண்போற் கிழமைக் கலப்பு - கண் போன்ற காதற் கிழமையாலுண்டான தொடர்பு; என்றது, ஈண்டுத் தருசகன் உதயணன் மரபினர்க்கும் தன் மரபினர்க்கும் பண்டு திருமணத்தொடர்பும் உண்டு என்று தன் படைத் தலைவர்களுக்கு உணர்த்துகின்றான் என்க. கண்போற்கிழமை என்றது காதற்கிழமையை. நாப்பண் - நடுவில்.