பக்கம் எண் :

பக்கம் எண்:315

உரை
 
3. மகத காண்டம்
 
18. தருசகனோடு கூடியது
 
           நட்புவலைக் கிழமையி னம்பொருட் டாக
           உட்குறு பெரும்படை யுலைத்த வொருவனை
           வேறெனக் கருதுதல் விழுப்ப மன்றெனத்
     90    தேறக் காட்டித் தெளிவு முந்துறீஇச்
           சென்றுகண் ணுற்ற குன்றா.........
           இடத்தொ டொப்புமை நோக்கி யிருவரும்
           தடக்கை பிணைஇச் சமயக் காட்சியர்
           அன்பிற் கலந்த வின்பக் கட்டுரை
     95    இருவருந் தம்மு ளேற்பவை கூறித்
           திருவமர் கோயில் சென்றுபுக் கவ்வழி
 
         (தருசகன் உதயணனை எதிர்கொள்ளல்)
              87 - 96 : நட்பு.........அவ்வழி
 
(பொழிப்புரை) அங்ஙனம் தன்னைத் தடுத்த அவ்வமைச்சர்களை நோக்கி அத்தருசகமன்னன், ''ரியீர்! வலைபோன்ற நட்புரிமையினாலே நம்பொருட்டு அஞ்சுதற்குரிய நம் பகை மன்னருடைய பெரும் படைகளைப் பொருது துரத்திய ஒப்பற்ற அம் மன்னனை நம்மில் வேறாகிய அயலான் என்று நினைத்தல் சிறப்பு அன்றாம்''ன்று அவ்வமைச்சர் தெளிந்துகொள்ளும்படி எடுத்துக் காட்டி அவரைத் தெளிவுறுத்திப் பின்னர்ச் செல்லாநிற்ப இங்ஙனம் எதிரெதிர் வந்து ஒருவரை ஒருவர் கண்ணுற்ற குறையாத......பிறப்பிட முதலியவற்றாலுண்டான ஒப்புமை நோக்கி அவ்வுதயணனும் தருசகனும் ஆகிய தத்துவக் காட்சியையுடைய அவ்விருவரும் கைகளைக் கோத்துக்கொண்டு அன்பினாலே ஒன்றுபட்ட இன்பமுடைய மொழிகளைத் தத்தமக்கு ஏற்றவாறு கூறி அளவளாவிச் செல்வம் நிறைந்த அரண்மனைக்குட் சென்று புகுந்த பொழுது ; என்க.
 
(விளக்கம்) நட்புவலை - வலை போன்ற நட்பு. உட்கு - அச்சம். வேறென - அயலான் என்று. விழுப்பம் - சிறப்பு. 91 ஆம் அடியில் இறுதிச் சீர் அழிந்தது; சமயக் காட்சி - தத்துவக் காட்சி. ஏற்பவை- தம்மியல்புக்குப் பொருந்துபவை. திரு - செல்வம் ; திருமகளுமாம்.