பக்கம் எண் :

பக்கம் எண்:317

உரை
 
3. மகத காண்டம்
 
18. தருசகனோடு கூடியது
 
           தானு மவனுந் தானத் திழிந்தோர்
           மணிக்கான் மண்டபத் தணித்தக விருந்து
           தொன்றுமுதிர் தொடர்பே யன்றியுந் தோன்ற
           அன்றைக் கிழமையு மாற்ற வளைஇப்
     110    பள்ளி மாடமொடு கோயிலும் பாற்படுத்
           தெள்ளி வந்த வின்னா மன்னரைப்
           போரடு வருத்தந் தீரப் புகுகெனத்
           தாருடை வேந்தன் றான்பின் சென்று
           கோயில் புகீஇ வாயிலு ளொழிந்து
     115    விருப்பிற் றீரான் வேண்டுவ வமைத்து
           வருத்த மோம்பினன் வத்தவற் பெற்றென்.
 
                    (இதுவுமது)
              106 - 116 : தானும்.........பெற்றென்.
 
(பொழிப்புரை) அவ்வுதயணனும் அத் தருசக மன்னனும் அவ்விடத்தினின்றும் சென்று மணிகள் பதித்த தூண்களையுடைய ஒரு மண்டபத்தின்கண் அழகுற அமர்ந்திருந்து பண்டைக்காலத்தே தோன்றி முதிர்ந்துள்ள நட்புரிமையை யல்லாமல் அற்றை நாள் தம்முள் கொண்ட நட்புரிமையும் தோன்றும்படி மிகவும் அளவளாவிய பின்னர்த் தருசக மன்னன், அவ்வுதயணன் பயிலுதற் பொருட்டுப் பள்ளி மாடமும் மண்டபமும் அமைத்துக் கொடுத்து, ''ந்தே! என்னை எளியன் என்று இகழ்ந்து வந்த என்னுடைய பகை மன்னர்களைப் போரின் கண் வென்றருளிய மெய் வருத்தம் தீரும்பொருட்டு அப்பள்ளி மாடத்தே புகுந்தருளுக என்று கூறிப் போக்கி வெற்றி மாலையையுடைய அவ் வேந்தன் உதயணன் பின் சென்று அவன் அம் மண்டபத்துட்புக்க பின்னரும் தன் விருப்பம் காரணமாக நீங்கானாய்ப் பின்னரும் அவனுக்கு வேண்டுவனவற்றை யெல்லாம் அமைத்துக் கொடுத்து அவ் வத்தவ மன்னனைத் தன் அன்பாற் பிணித்து அவனது மெய் வருத்தத்தைத் தீர்த்தனன்; என்க.
 
(விளக்கம்) தானும் - அவ்வுதயணனும். அவனும் - அத்தருசகனும், வழியில் இறங்கித் தழுவிக்கொண்டு அளவளாவிய பின்னர் மீண்டும் தத்தம் ஊர்தியில் வந்தார் என்பது தோன்ற 'தானத்திழிந்து' என்றார்.அணித்தக - அழகுற. தொன்று - பண்டு. ஆற்ற - மிகவும். அளைஇ - அளவளாவி ; உதயணன் பொருட்டுப் பள்ளி மாடமொடு கோயிலும் பாற்படுத்து என்க. எள்ளி - இகழ்ந்து. வேந்தன் - தருசகன். புகீஇ -புகுந்து. விருப்பின் வாயிலுளொழிந்து தீரான் என மாறுக

18. தருசகனொடு கூடியது முற்றிற்று.