பக்கம் எண் :

பக்கம் எண்:318

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
           வத்தவற் பெற்ற வலிப்பின னாகி
           மத்த யானை மகத மன்னனும்
           அருமுர ணடுதொழி லிளமைய னிவனொடு
           தரும சாத்திரந் தலைக்கொள் கென்று
      5    பூசனை வழக்கொடு புரையவை நடுவண்
           வாசனைக் கேள்வி வழிமுறை தொடங்கலிற்
 
 
              1 - 6 : வத்தவன்.........தொடங்கலின்
 
(பொழிப்புரை) மதச் செருக்கினையுடைய யானைப் படைகளையுடைய மகத மன்னனாகிய தருசகன் உதயணனை நண்பனாகப் பெற்ற புதிய துணைவலியினை யுடையவனாகி வெல்லுதற்கரிய போர்கள் பலவுஞ் செய்து பகைவரை வென்று வாகைசூடும் தொழிலையுடையவனும் இளமையுடையவனுமாகிய இவ்வுதயணன்பால் யான் அறநூலைக் கற்றுக்கொள்வேன் என்று துணிந்து நூல் கற்கத் தொடங்குங்கால் செய்யும் வழிபாட்டு முறைமையோடே உயர்ந்தோர் அவை நடுவில் ஓதுதலையும், கேட்டலையும் மரபின்படி தொடங்காநிற்ப; என்க.
 
(விளக்கம்) வலிப்பினன் - வலியையுடையோன். மத்தம் - மதச்செருக்கு. முரண் - போர்; பகையுமாம். தருமசாத்திரம் - மன்னருக்கு இன்றியமையாத அறநூல். கொள்கு - கொள்வேன். பூசனை - வழிபாடு. புரையவை - உயர்ந்தோர் சபை. வாசனை - ஓதல்.

(ஓடிய பகை மன்னர் மீட்டும் போர் செய்தற்கு வரல்)