பக்கம் எண் :

பக்கம் எண்:319

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
           பரந்த மன்னர் நிரந்துகண் கூடிக்
           கற்ற நூலிற் செற்ற வேந்தன்
           வேறுபடக் காட்டிக் கூறுபட வறுப்பத்
     10     தொலைதல் காரண மாகவது துணிந்த
           நிலையி னெஞ்சினர் நும்முள் யாரெனத்
           தலைக்கூட் டமைத்துத் தம்முள் வினவத்
           தெய்வ மிடைநிலை யாக வதன்றிறம்
           ஐயந் தீர வறிவம் யாமெனத்
     15     தம்பாற் றெளிந்த தன்மைய ராகி
 
 
               7 - 15 : பரந்த.........தன்மையராகி
 
(பொழிப்புரை) புறமிட்டுச் செவிச் செவியறியாது ஓடிய விரிசிகன் முதலிய அப் பகைமன்னர்கள் மீண்டும் தம்முள் ஓரிடத்தே கூடியிருந்து நம் பகைமன்னனாகிய தருசகன் தான் கற்ற அரசியல் நூல் அறிவினாலே நம்மனோர் வேறுபடும்படி பல காரணங்களைக் காட்டி யாம் தனித்தனியாகப் பிரியும்படி யாம் தோற்றல் காரணமாகக் கொண்டு கீழறுத்தல் செய்ய, அதுகேட்டு அங்ஙனமே செய்யத் துணிந்த நிலையற்ற நெஞ்சையுடைய புல்லியோர் நுங்களுள் வைத்து யாரேதாம் என்று வினவித் தெரிந்து கோடற் பொருட்டுத் தம்முள் ஒரு கூட்டமமைத்துத் தெய்வஞ் சான்றாக அச் செய்தியை யாம் ஐயமகல அறிந்துகொள்வோம் என்று தம்முள் முடிவு செய்து கொண்ட தன்மையை உடையராகி; என்க.
 
(விளக்கம்) நிரந்து - கூடி. கண் - இடம். நூலின் - நூலறிவு காரணமாக, செற்ற வேந்தன் - பகை வேந்தன்; என்றது தருசகனை, வேறுபடக் காரணங்காட்டி என்க. கூறுபட - தனித்தனியாக. அறுப்ப - கீழறுத்தல் செய்ய. தலைக்கூட்டு - கூட்டம். இடைநிலை - சான்று.