பக்கம் எண் :

பக்கம் எண்:323

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
           நன்னாடு நடுங்க நண்ணித் துன்னிய
     35    ஈர நெஞ்சத் தார்வ லாளர்
           பாரந் தாங்கும் பழமை போல 
           இலைக்கொடிச் செல்வமொடு தலைப்பரந் தோங்கிய
           கணைக்கா லிகணையுங் கமுகும் வாழையும்
           சினப்பெரு மாவும் பணைக்காற் பலாவுங்
     40    கொழுமுதற் றெங்கொடு முழுமுத றொலைச்சிக்
           கழனி விளைநெற் கனையெரி கொளீஇப்
           பழன நன்னாடு படியழித் துராஅய்ச்
 
              (பகைவர் மகதநாட்டுச் சோலை
                முதலியவற்றை அழித்தல்)
              34 - 43 : நன்னாடு........நோக்கி
 
(பொழிப்புரை) மகத மன்னன் அந்த நல்ல நாட்டின்கண் வாழும் மாந்தர் அஞ்சி நடுங்கும்படி புகுந்து பொருந்திய அன்பு மிக்க நெஞ்சத்தையுடைய ஆர்வமுடைய நல்லோர் தமது கேளிர்களைத் தாங்குகின்றதொரு தொன்மைபோல தம்மீது படர்ந்து அடர்ந்த இலைமிக்க கொடிகளாகிய செல்வத்தோடு தலைவிரிந்து உயர்ந்துள்ள திரண்ட அடிப் பகுதியையுடைய இகணை மரங்களையும், கமுகையும், வாழையையும் கிளைகளையுடைய பெரிய மாமரங்களையும் பருத்த அடிப் பகுதியையுடைய பலா மரங்களையும் கொழுவிய அடியினையுடைய தென்னை மரங்களையும், வேருடன் வெட்டி வீழ்த்திக் கழனிகளில் விளைந்து கிடக்கும் நெற்கதிர்களில் மிக்க தீயினைக் கொளுவியும் வயல்கள் நிறைந்த அந்த நன்னாட்டினது அழகினை யழித்துவாராநின்ற சினத்திற் சிறந்த அப்பகை மன்னர்களுடைய வருகையைப் பார்த்து; என்க
 
(விளக்கம்) துன்னிய - பொருந்திய. ஈரம் - அன்பு. பாரம் - சுமை, ஆர்வலாளர், ஈண்டுக் கேளிர். பழைமை என்பது பழைமையான பண்புபோல என்றவாறு. ஈண்டு அன்புடையோர் தங்கேளிரைத் தாங்குதல் போன்ற இகணை மரங்கள் தம்மேற் படர்ந்துள்ள கொடிகளைத் தாங்கி நின்றன என்று உவமை கூறியவாறு. சினை-கிளை; பணை - பருத்த. முதல் - அடி. தெங்கு - தென்னை. முழுமுதல் - வேர். தொலைச்சி - அழித்து. கனை - மிகுதி. படி - அழகு; வடிவமுமாம். செயிர்ப்பு - பகைத்தல்.