பக்கம் எண் :

பக்கம் எண்:329

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
           தன்மேல் வந்த தாக்கரும் பொருபடை
           என்மேற் கொண்டனெ னாகி முன்னே
           எறிந்தனெ னகற்றி யின்பம் பெருகச்
           சிறந்ததோர் செய்கை செய்தே னின்னும்
     80    மறிந்துவந் தனரே மாற்றோ ரென்ப
           தறிந்தென னதன்மாட் டவலம் வேண்டா
 
                    (இதுவுமது)
            76 - 81 : தன்மேல்.........வேண்டா
 
(பொழிப்புரை) ''நின் மேலே போர் செய்தற்கு வந்த தாக்குதற்கரிய போர்ப் படைகளை யானே ஏற்றுக்கொண்டேனாய் முன்னே போர் செய்து அப்பகைவரைத் தொலைத்து ஓட்டி இந் நாட்டிலே இன்பம் பெருகும்படி சிறந்ததொரு செயலைச் செய்தேன் அல்லெனோ! மீண்டும் அப் பகை மன்னர்களே நாணமின்றி நின்மேல் போராற்றுதற்குத் திரும்பி வந்தனர் என்னும் செய்தியை யான் அறிந்துள்ளேன். அந் நிகழ்ச்சி பற்றி உனக்குச் சிறிதும் கவலை வேண்டா'' என்க..
 
(விளக்கம்) என்மேற் கொண்டனன் - யானே மேற்கொண்டனன். மறிந்து வந்தனர் - மீட்டும் வந்தனர். மாற்றோர் - பகைவர். அதன் மாட்டு - அந் நிகழ்ச்சியின்கண். அவலம் - கவலை.