பக்கம் எண் :

பக்கம் எண்:33

உரை
 
3. மகத காண்டம்
 
2. மகதநாடு புக்கது
 
           துலகிற் கெல்லாந் திலகம் போல்வ
           தலகை வேந்த னாணை கேட்ப
           தரம்பு மல்லலுங் கரம்பு மில்லது
           செல்வப் பெருங்குடி சிறந்தணி பெற்றது
    50     நல்குர வாளரை நாடினு மில்லது
           நன்பெரும் புலவர் பண்புளி பன்னிய
           புகழ்ச்சி முற்றா மகிழ்ச்சியின் மலிந்த
           தின்னவை பிறவு மெண்ணுவரம் பிகந்த
           மன்பெருஞ் சிறப்பின் மகதநன் னாடு
    55     சென்றுசார்ந் தனராற் செம்மலொ டொருங்கென்
 
                 இதுவுமது
         46-55 ; உலகிற்கு............ஒருங்கென்
 
(பொழிப்புரை) நிலமகளுக்கிட்ட திலகம் போன்றதும், ஏனைய மன்னர்க்கெல்லாம்
  ஓர் எடுத்துக்காட்டாக அமைந்த சிறந்த  முடிமன்னனுடைய ஆணையினடங்கி
  ஒழுகுவதும், வேந்தலைக்கும் கொல் குறும்பில்லாததும், கரம்பு நிலமற்றதும்,
  செல்வப் பெருக்குடைய பெருங்குடி மக்களாலே சிறப்புற்று அழகுடையதும்,
  அந்நாடு முழுதும் தேடிப்பார்த்தாலும் வறியோர் ஒருவரையேனும்
  காண்டற்கியலாததும், நல்லிசைப் பெரும்புலவர்கள் தமக்குரிய பண்போடு
  புனைந்த புகழ்ச்சி முடிவுறாததும், மகிழ்ச்சியின் பிறநாட்டினும் மிக்கதும்
  இன்னோரன்ன நல்ல நாட்டிற்குரிய ஏனை நலங்களானும் அளவுபடாது
  நிலைபெற்ற சிறப்பினையுடையதும் ஆகிய மகதம் என்னும் நல்ல நாட்டினை
  அவ்வுருமண்ணுவா முதலியோர் செம்மலாகிய உதயணனை அழைத்துக்கொண்டு
  எய்தா நின்றனர் என்க,
 
(விளக்கம்) ''நிலமகண் முகமோ திலகமோ?.' எனக் கம்ப நாடரும் கூறுதல் காண்க.
  அலகை-எடுத்துக் காட்டு. அரம்பு-கொல் குறும்பு, கரம்பு-பாழ் நிலம், புலவர்
  பன்னிப் பன்னிப் புகழ்ந்தும் புகழ்தல் முற்றுப் பெறாதது என்றவாறு. செம்மல் -
  தலைவன் உதயணன்.

                 2. மகதநாடு புக்கது முற்றிற்று,
     -----------------------------------------------------------------------