பக்கம் எண் :

பக்கம் எண்:336

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
         
     125     கேகயத் தரசனுங் கிளந்துபல வெண்ணிக்
             காவல் வேந்தனைக் கண்டுகை கூப்பி
             வானோர் பெரும்படை வந்த தாயினும்
             யானே யமையு மடிக ளென்னை
             விடுத்தற் பாற்றென வெடுத்தவ னிசைப்பத்
 
                      (இதுவுமது)
             125 - 129 : கேகயத்.........இசைப்ப
 
(பொழிப்புரை) அம் மன்னவன் தருசகன் பால் வந்து கை கூப்பி வணங்கிப் ''பெருமானே ! நினக்குப் பகையாக வந்த இச் சங்க மன்னர்கள் கிடக்க, வானுலகத்துள்ள தேவர்களினது பெரிய படையே நின்மேல் போர்க்கு வந்ததாயினும் யான் ஒருவனே அவர்களை யெல்லாம் வெல்லுதற்கு அமையும்,'' ஆதலால், ''அடிகள், பகைவர் பால் என்னையே யேவுக !'' என்று அவன் எடுத்துக் கூறா நிற்ப ; என்க.
 
(விளக்கம்) கிளந்து - வெளிப்படையாகச் சொல்லி. காவல் வேந்தனை - தருசகனை. அடிகள் : விளி. அவன் - அவ்வச்சுவப் பெருமகன்.