பக்கம் எண் :

பக்கம் எண்:338

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
            தன்படைத் தலைவ னாக வெம்மொடே
            வன்படை யாளன் வருக வென்றனன்
            மாண்ட வத்தவ ராண்டகை யாதலின்
     140     நம்மேல் வந்த வெம்முரண் வீரர்
            தம்மேற் சென்று தருக்கற நூறுதல்
            வத்தவ ரிறைவனும் வலித்தன னவனோ
            டொத்தனை யாகி யுடன்றமர் செய்ய
            வல்லை யாயிற் செல்வது தீதன்
     145    றென்றவன் விடுப்ப நன்றென விரும்பி
            ஒட்டிய குமர னுள்ள நோக்கி
 
          (தருசகன் கேகய மன்னனைப் போருக்கு விடுத்தல்)
               137 - 146 : தன்படை ......... நோக்கி
 
(பொழிப்புரை) தருசகமன்னன் அக்கேகய மன்னனை நோக்கி ''மைத்துன! மாட்சிமையுடைய அவ்வத்தவ மன்னன் என்னுடைய  படைத் தலைவனாகத் தன்னுடனே வலிய படையையுடைய ஒரு மன்னன் வருக! என்று அறிவித்துள்ளான். நம்மேல் படை கொண்டு வந்த வெவ்விய ஆற்றல் மிக்க அச்சங்க மன்னர் படை மறவர் மேலே சென்று அவர் தம் செருக்கற்றுப் போம்படி தாக்குதலையே அவ்வுதயண மன்னனும் துணிந்துள்ளான். ஆதலின் அம்மன்னவனோடு கூடி நீயும் போருக்குச் சென்று அப்பகைவரைச்  சினந்து போர் ஆற்றுதற்கு வல்லாய் ஆயின் நீ செல்வது நன்றேயாம். தீதன்று காண்'' என்று கூறி விடுப்ப. அது கேட்ட அக் கேகய மன்னன் நன்று நன்று! என அச்செயலைப் பெரிதும் விரும்பி உடன்பட்டானாக; தருசகன் அக்கேகய மன்னனுடைய  கருத்தினை அறிந்த பின்னர்; என்க.
 
(விளக்கம்) வன்படையாளன்-வலியபடையை யுடையோன். ஆண்டகை - ஆண்மை மிக்கவன்; உதயணன். வீரர் - பகைவீரர். உடன்று - சினந்து. வல்லையாயின் - வல்லாயானால். குமரன் - கேகயத்தரசன். உள்ளம் நோக்கி - கருத்தினையுணர்ந்து.