உரை |
|
3. மகத காண்டம் |
|
3. இராசகிரியம் புக்கது |
|
மன்பெருஞ் சிறப்பின் மகதநன் னாடு
சென்று சார்ந்தபின் வென்றியிற்
பெருகி
யாறுங் குளனும் வாய்மணந் தோடித்
தண்டலை தோறுந் தலைபரந்
தூட்டி 5 வண்டிமிர் பொய்கையும்
வாவியுங் கயமும்
கேணியுங் கிணறு நீணிலைப் படுவும்
நறுமலர் கஞலி யுறநிமிர்ந்
தொழுகிச் சாலி
கவினிய கோலச்
செறுவிற் செல்வங்
கொடுத்து நல்குத லறாஅ 10
இன்பங் கெழீஇய மன்பெருஞ் சிறப்பிற்
பல்குடித் தொல்லூர் புல்லுபு
சூழ |
|
(மகத
நாட்டகத்தூர்களின்
சிறப்பு)
1 - 11 ; மன்பெரு.................சூழ |
|
(பொழிப்புரை) பிறநாட்டை வென்று
பெருக்கமடைந்தமையாலே நிலைபெற்ற பெரிய சிறப்பினையுடைய 'மகதம்' என்னும்
நல்ல நாட்டினை இவ்வாறு உதயணன் முதலியோர் சென்று சேர்ந்த பின்னர்
அம்மகத நாட்டின்கண், யாறுகளும் ஏரிகளும், வாய்க்கால்களைப்
பொருந்தி ஒழுகி மலர்ப் பொழில்தோறும் பரவி நீரூட்டி வண்டுகள்
இசைமுரலாநின்ற பொய்கைகளும் வாவியும் குளமும் கேணிகளும் கிணறுகளும்
நீண்ட நீர்நிலையாகிய மடுக்களும் நறிய மலர்களானே நிறைந்து சிறக்கும்படி
பெருகிப் பாய்ந்து நெற்பயிராலே அழகெய்தி வேறுபல அழகு முடைய
கழனிகளின்கண் விளையும் நென்முதலிய செல்வங்களை ஆற்றவும் பெருக்குதலாலே
அவற்றைப் பிறநாட்டினின்றும் வருந்தி வருவோர்க்கு வழங்குதல் ஒழியாமையாலே
அறத்தால் வரும் இன்பத்திலே திளைத்தலையுடைய நிலைபெற்ற பெரிய
சிறப்பினையுடைய பலவாகிய குடிமக்கள் வாழ்கின்ற பழைமையான
ஊர்கள் தன்னைத் தழுவியவாய்ச் சூழ்ந்துளவாகாநிற்றலாலே என்க, |
|
(விளக்கம்) யாறும் குளனும்
(3) என்பது தொடங்கி இன்பங் கலந்த என்னுமளவும் (114) இராசகிரிய
நகர்க்கு வண்ணனையாய் வந்த அடை மொழிகளாகும். குளனும் (3) என்றது
ஏரிகளை, வாய் -வாய்க்கால். தண்டலை மலர்ப்பொழில். பொய்கை-இயற்கை
நீர்நிலை. வாவி-நீரோடை. கயம்-ஆழமான குளம். கேணி-சிறுகுளம். இதனை
இக்காலத்தார் குட்டை என்று வழங்குப. படு- மடு. கஞலி-செறிந்து,
சாலி - நெற் பயிர், சாலி கவினியதனாலுண்டான கோலமென்க.
கோலம்-அழகு. செறு-கழனி. கொடுத்தலாலே நல்குதல் அறாஅத என ஏது வாக்குக.
நல்குதல் அறாமையாலுண்டான இன்பம் என்க. ''அறத்தான் வருவதே இன்பம்..
என்பதுபற்றி நல்குதல் அறாஅ இன்பம் என்றார். அந்நாடு நல்குரவாளரை
நாடினும் இல்லது என்றமையின் ஈண்டு நல்குதல் என்றது வேறுநாட்டினின் றும்
நல்கூர்ந்து வரும் இரவலர்க்கு என்பது பெற்றாம், புல்லுபு-புல்லி- தழுவி.
இராசகிரியத்தைப் புல்லுபு சூழ என்றவாறு. |