உரை |
|
3. மகத காண்டம் |
|
19. படை தலைக்கொண்டது |
|
155
மீட்டவற் போக்க வேட்பனன்
விரும்பியவன்
கூறிய மாற்றங் கோமான்
றன்னொடு
வீறியல மைச்சர் வேறாக்
கேட்டுக்
குறையின் வேண்டுங் கரும
முறையிற் றானே
முடிந்ததென் றானா வுவகையன் 160
யானையும் புரவியு மமையப்
பண்ணி மாண்வினைப்
பொலிந்தோர் வருக
மற்றோர்
சேனை நாப்பட் சேருக
வின்றெனப்
பெயர்த்து மற்றவற் குரைத்தலிற்
பெருமகன்
களிற்றுப் பாகனை விளித்தன னிறீஇ
165 அண்ணல் யானை பண்ணி
வருகெனக்
|
|
(இதுவுமது) 155
- 165 : வேட்பனன்........வருகென
|
|
(பொழிப்புரை) இவ்வாற்றான் அவ்வயந்தகன்
கொணர்ந்த செய்தியையும், பதுமாபதியை மணம் செய்து கோடற்கு விரும்பியவனாகிய
அக்கேகயத் தரசன் தருசகனுக்குக் கூறிய செய்தியையும் வத்தவமன்னன் வீறுடைய தன்
அமைச்சரோடு தனி இடத்திலிருந்து கேட்டறிந்து நன்று நன்று யாம் விரும்பிய காரியம்
தானே முறைமையோடே முடிந்ததென்று தன்னுட் கருதித் தணியாத மகிழ்ச்சியுடையனாய் தம்
யானைகளையும் குதிரைகளையும் ஒப்பனை செய்து கொண்டு, மாட்சிமையுடைய போர்த் தொழிலில்
சிறந்த மறவர்கள் புறப்பட்டு வருவாராக! கேகய மன்னன் போன்ற ஏனைய நண்பரும் அச்சேனை
நடுவண் இன்றே வருக! என்று மீட்டும் அத்தருசக மன்னனுக்குச் சொல்லி விடுத்தலாலே,
அப்பெருமகன்றானுந்தனது களிற்றுப் பாகர் தலைவனையழைத்து நீ சென்று நமது யானைகளை அணியாக
நிறுத்திப் பண்ணுறுத்திக் கொணர்க ! என்று பணித்தலாலே
என்க.
|
|
(விளக்கம்) வேட்பனன் - விரும்பியவன். பதுமாபதியை மணக்க
விரும்பிய கேகய மன்னன். கோமான் - உதயணன். அமைச்சர் - உருமண்ணுவா முதலியோர்.
யாம் வேண்டிக் கோடற்குரிய காரியம் தானே முடிந்தது என்று மகிழ்ந்தவாறு. அஃதாவது
கேகயத்தரசன் போர்க்களத்திற்கு வருதல் வேண்டும் என்பது. மாண்வினைப் பொலிந்தோர்
- மாட்சிமையுடைய போர்த் தொழிலிற் சிறந்த மறவர். மற்றோரென்றது கேகயத்
தரசனை உள்ளிட்டோர் என்பது பட நின்றது. அவற்கு- தருசகனுக்கு. அண்ணல் - தலைமையுடைய.
யானை நிறீ இப் பண்ணி வருக எனமாறுக. நிறீஇ -
நிறுத்தி.
|