பக்கம் எண் :

பக்கம் எண்:341

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
           கண்ணார் தகைய கவுளிழி கடாத்தன
           மண்ணார் நுதலின மாசின் மருப்பின
           ஆற்ற லமைந்தன நீற்பாற் புறத்தன
           அமர்பண் டறிந்தன வச்ச மில்லன
     170    புகரில் வனப்பின போரிற் கொத்தன
           கோலங் கொளீஇச் சீலந் தேற்றின
           இருபாற் பக்கமு மெய்து மெறிந்தும்
           பொருவோர்ச் செகுக்கப் புன்படைக் கருவி
           அடக்குபு பண்ணித் துடக்குபு காட்டும்
     175    தோட்டி கொளீஇக் கூட்டுபு நிரைத்த
           வேல்வ லிளையர் கால்புடை காப்பக்
           கோயின் முற்றத் துய்த்தலின் வாய்மொழி
 
                    (யானைகள்)
              166 - 177 : கண்............உய்த்தலின்
 
(பொழிப்புரை) அப்பாகர்தலைவன் சென்று அங்ஙனமே யானைகளை அணிவகுத்து நிறுத்திப் பண்ணுறுத்திக் கண்ணிறைந்த  அழகுடையனவும் கவுளின்கண் மதநீர் ஒழுகுவனவும் தூய்மை செய்த நெற்றியையுடையனவும் குற்ற மற்ற மருப்புக்களை  யுடையனவும் போராற்றல் மிக்குப் பொருந்தியனவும் நீலநிறமுடைய  உடம்பையுடையனவும் பண்டு போர்பல செய்து அறிந்தனவும் அச்சம் சிறிதும் இல்லனவும் குற்றமற்ற அழகுடையனவும் போர்த் தொழிலுக்கு மிகவும் தகுதி பெற்றனவும் ஒப்பனை செய்யப் பட்டுப் பாகர்களால் நல்லொழுக்கம் பயிற்றப்பட்டனவும் ஆகிய அவ்வியானைகளின் மேல் வலமும் இடமுமாகிய இரண்டு பக்கங்களிலும் எய்தும் எறிந்தும் தம்பகைவரைக் கொல்லுதற்குரிய  புன்றொழிலையுடைய படைக்கலங்களை உறைகளிலடக்கித் தூங்கவிட்டு நெறிகாட்டும் தோட்டி முதலிய கருவிகளையும் மாட்டி வைத்து நிரல்படுத்த வேல் வன்மையையுடைய மறவர்கள் அவற்றின் காற்பக்கங்களிலே, காத்து வாரா நிற்ப, அரண்மனை முற்றத்தே கொண்டு வந்து நிறுத்துதலாலே ; என்க.
 
(விளக்கம்) தகைய - அழகுடையன. கடாம் - மதம். நீற்பால் - நீலநிறமுடைய பகுதி. புகர் - குற்றம், வனப்பு - நல்லிலக்கணம். சீலம் - நல்லொழுக்கம். பொருவோர் - பகைவர். புல்லிய தொழில் செய்தற் கருவியாகலின் புன்படைக் கருவி என்றார் போலும். கோயில் - அரண்மனை.