பக்கம் எண் :

பக்கம் எண்:347

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
         
     215    அங்கண் மாதிரத் ததிர்ச்சி யெய்த
           வெங்கண் முரசொடு பல்லியங் கறங்க
           அறியச் செய்த குறியுடைக் கொடியர்
           கூற்றுல கின்று கொள்ளா தாமென
           ஆற்றல் கலந்த வார்ப்பின ராகி
     220    மலைத்துமேல் வந்த மகதவன் படையொடு
           தலைப்பெய் தன்றாற் பகைப்படை பரந்தென்.
 
                         (இதுவுமது)
                215 - 221 : அங்கண்.........பரந்தென்
 
(பொழிப்புரை) அழகிய இடமமைந்த திசைகளிலே சென்று அதிரும்படி வெவ்வியகண்ணையுடைய போர்முரசத்தை உள்ளிட்ட பல்வேறு இசைக் கருவிகள் ஆரவாரியா நிற்ப, அச்சங்க மன்னர் தத்தம் படைகளைத் தனித் தனியாக அறிந்து கோடற்குத் தத்தம் அரசடையாளங்களையுடைய தனித்தனிக் கொடியை உயர்த்தியவர்களாய்க் கண்டோர் இற்றை நாட் போரில் இறந்து படும் உயிர்க் கூட்டங்களைக் கூற்றுலகம் கொள்ளமாட்டாது என்று வியந்து கூறும்படி, ஆற்றலொடு விரவிய ஆரவாரத்தை உடையராய்ப் போர்த் தொழிலைத் தொடங்கித் தம் மேல் வந்த அம்மகத மன்னன் படைஞரோடு பகைப் படைஞராகிய அச்சங்க மன்னர் மறவர்கள் அப்போர்க்களத்திலே யாண்டும் பரவிக்கைகலப்பாராயினர் ; என்க.
 
(விளக்கம்) அங்கண் - அழகிய இடம். மாதிரம் - விசும்புமாம். இயம் - இசைக் கருவி. கறங்க - ஆரவாரிப்ப. கண்டோர் இன்று இறந்துபடும் உயிர்களைக் கூற்றுலகு கொள்ளாதாகும் என்று கூற என்க. ஆற்றல் - போர் செய்தல். மகதவன் படை - தருசகன் படை. பகைப்படை - சங்க மன்னர் படை. தலைப்பெய்தன்று - கலப்புற்றது.

                19. படைதலைக் கொண்டது முற்றிற்று.