பக்கம் எண் :

பக்கம் எண்:348

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
           பரந்த பெரும்படை யெதிர்ந்த காலை
           அருங்கணை நிறைந்த வாவ நாழிகை
           பெரும்புறத் திட்ட கருங்கச் சீர்ப்பினர்
           பிறர்ப்பிறக் கிடீஇச் சிறப்பிகந் தெள்ளி
      5    நகுவன போலத் தொகைகொண் டார்ப்புறும்
           பைங்கழ லணிந்து பரிபசை வில்லா
           இசைகொ ணோன்றா ளசைவி லாண்மையர்
 
                    (காலாட்படை)
              1 - 7 : பரந்த.........ஆண்மையர்
 
(பொழிப்புரை) இவ்வாறு அப்போர்க்களமெங்கும் பரவி அவ்விரு கூற்றுப் பெரும் படைகளும், தம்முள் எதிர்ந்த பொழுது, இரு படையிலுமுள்ள ஆற்றல் மிக்க காலாட்படை மறவர்கள் தடுத்தற்கரிய அம்புகள் நிறைக்கப் பட்ட அம்பறாஅத் தூணிகளைத் தத்தம் பெரிய முதுகிலே தூங்கவிட்டவராய்க் கரிய கச்சைகளை இழுத்துக் கட்டியவரும், தத்தம் பகைவரைப் புறங்கொடுக்கச் செய்தலாலே அப்பகைவருடைய மறச் சிறப்பினைப் பெரிதும் இகழ்ந்து சிரிப்பன போன்று தொகுதிகளாய்க் கிடந்து ஆரவாரியாநின்ற பசிய வீரக்கழல்களை யணிந்து துன்புறுதலும் தளர்தலும் இல்லாத புகழ் கொண்ட வலிய முயற்சியினையுடையரும், தளராத ஆண்மையுடையரும் ஆகி ; என்க.
 
(விளக்கம்) அருங்கணை - தடுத்தற்கரிய அம்பு. ஆவநாழிகை - அம்பறாத்தூணி. பெரும்புறம் - பெரியமுதுகு. கச்சு ஈர்ப்பினர் - இழுத்துக் கட்டிய கச்சையுடையவர். பிறர்ப் பிறக்கிடீஇ-பகைவரைப் புறங்கொடுக்கச் செய்தலால். இகந்தெள்ளி - மிகுதியாக இகழ்ந்து. சென்ற சென்ற போர்தொறும் பகைவரை வென்று வென்று கட்டிய கழல்களும் பலவாகலின் தொகை கொண்டார்ப்புறும் பைங்கழல் என்றார். பரிபு - வருந்தி. அசைவு - இளைத்தல். இசை - புகழ். தாள் - முயற்சி. அசைவிலாண்மை - தளராத மறம்.