பக்கம் எண் :

பக்கம் எண்:350

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
           படைமிசை நிரைத்த வடிவமை வார்நூற்
           சித்திரக் குரத்தின வித்தகக் கைவினைப்
           புடைப்பொற் புளகமொடு பொங்குமயி ரணிந்த
           அரத்தப் போர்வைய யாப்பமை கச்சின
     20    முற்றுமறை பருமமொடு பொற்பூஞ் சிக்கத்
           தாண வட்டத் தியாப்புப் பிணியுறீஇக்
           கோண வட்டக் கோல முகத்த
           வெண்கடற் றிரையென மிசைமிசை நிவந்தரும்
           பொங்குமயி ரிட்ட பொலிவின வாகி
 
                   (குதிரை வீரர்)
                16 - 24 : படை.........ஆகி
 
(பொழிப்புரை) இனி, இருபடையினுமுள்ள குதிரைப் படை மறவர்கள் படைக் கலங்களைத் தம்மேலே நிரப்பப்பட்டனவும் அழகமைந்த வார்களையும் நூல்களையும் அழகிய குளம்புகளையும் உடையனவும் கலைத்தொழிலையுடைய பக்கங்களையுடைய பொன்னாலியன்ற கண்ணாடிகளோடு சாமரை அணியப் பட்டனவும், சிவந்த போர்வையையுடையனவும், பொருத்த முடைய கச்சுகளை உடையனவும், முதுகு முழுவதும் மறையா நின்ற சேணத்தையுடையனவும், பொன்னாலாகிய அழகிய குடுமியின் கண் ஆணவட்டத்தினை (?) ப்  பொருத்த முறக் கட்டிய கோணாவட்டம் என்னும் விருதினை யொத்த அழகிய முகத்தையுடையனவும், பாற் கடலினது அலைகளைப் போன்று மேலே எழுந்து மறிகின்ற சாமரை கட்டிய பொலிவினையுடையனவும் ஆகி; என்க.
 
(விளக்கம்) படை - படைக்கலம். நிறைத்த : முற்று. வடிவு - அழகு. வாரும் நூலும் என்க. சித்திரக்குரத்தின - சித்திரத்தில் எழுதப்பட்டவை போன்ற அழகிய குளம்புகளையுடையன. வித்தகக் கைவினை - சிற்பத்தொழில். புளகம் - கண்ணாடி. பொங்குமயிரணிந்த - சாமரையணிந்தன. அரத்தப் போர்வைய - சிவப்புப் போர்வையையுடையன. பருமம் - சேணம். சிக்கம் - குடுமி; உச்சியுமாம். கோண வட்டம் - ஒருவகை விருது; இது கோணாவட்டமெனவும் கூறப்படும். அதுபோன்ற அழகிய முகத்தையுடையன வென்பது கருத்து.