பக்கம் எண் :

பக்கம் எண்:354

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
           சித்திரத் தாமரைப் பத்திரப் பரூஉத்தொடி
           நுதிமுக வெண்கோடு முதலற வெறிதலிற்
           செக்கர்க் குளிக்கும் வெண்பிறை போல
           உட்குவரு குருதியு ளுடன்பல வீழவும்
     55    கார்முகக் கடுமுகி லூர்தி யாக
           விசும்பிடைத் திரிதரும் விஞ்சை மாந்தரைக்
           கடுந்தொழில் விச்சை கற்ற மாற்றவர்
           மறத்தா னெருங்கி மற்றவ ருடனே
           நிறத்தே றுண்டு நிலத்துவீழ் வதுபோல்
     60    மார்பின் வெம்படை யார மாந்தி
           வீர நோக்கினர் வேழமொடு வீழவும்
 
                     (இதுவுமது)
               51 - 61 : சித்திர.........வீழவும்
 
(பொழிப்புரை) தாமரைமலர் போன்ற சிற்பம் செதுக்கப்பட்ட அழகிய பரிய தூணையுடைய நுனியாகிய முகத்தையுடைய வெள்ளிய மருப்பு அடியறும் படி வெட்டி வீழ்த்துதலாலே அத்தகைய மருப்புகள் செவ்வானத்திலே அழுந்துகின்ற வெள்ளிய பிறை போன்று அச்சம் வருவதற்குக் காரணமான குருதி வெள்ளத்தின் கண் ஒருங்கே பற்பல வீழ்ந்து முழுகாநிற்பவும், இந்திர வில்லையுடைய கடிய முகில்களை ஊர்தியாகக் கொண்டு வானத்தின்கண் இயங்கா நின்ற விச்சாதரர்களைக் கடிய போர்த்தொழில் வித்தையை நன்கு கற்ற அவர் தம் பகைவர் வீரத்தால் எதிர்ந்து போரிட்டு மார்பிலே படைக்கலம் ஏறுண்டு அவ்விச்சாதரரோடே நிலத்தின்கண் வீழ்வது போல யானை மறவர்கள் யானை மேலிருந்து போராற்றி தம் மார்பின் கண் வெவ்விய படைக் கலங்களை ஏற்றுக்கொண்டு வீரம் குறையாத நோக்கையுடையராய் அந்த யானைகளின் மீதிருந்து களத்தில் வீழாநிற்பவும்; என்க.
 
(விளக்கம்) தாமரைச் சித்திரத்தொடி, பத்திரத் தொடி பருஉத் தொடி எனத் தனித்தனி கூட்டுக. தாமரைச் சித்திரம் - தாமரைப் பூப்போன்று செதுக்கிய சிற்பம். பத்திரம் - அழகு. நுதி முகம் - நுதியாகிய முகம் என்க. முதலற - அடி அறும்படி. செக்கர் - செவ்வானம். உட்கு - அச்சம். கார்முகம் - இந்திரவில். விஞ்சை மாந்தர் - விச்சாதரர். மாற்றவர் - பகைவர். நிறம் - மார்பு. உயிர் நிலையுமாம். மாந்தி - உட்கொண்டு.