பக்கம் எண் :

பக்கம் எண்:360

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
           ஒண்டார் மார்பன் கொண்டமை கண்டே
     95    ஒருக்கி நிரல்பொரூஉ முருமண் ணுவாநம்
           கருத்துவினை முடிக்குங் கால மிதுவென
           வேக வெள்வேற் கேகயத் தரசனை
           அடைதர்க வல்விரைந் தமரார் பெரும்படை
           உடைவிடம் போல வுண்டென வுரையா
 
                      (இதுவுமது)
                94 - 99 ; ஒண் ......... உரையா
 
(பொழிப்புரை) ஒள்ளிய மலர்மாலையணிந்த மார்பினையுடைய உதயணன் அவனைக் கைப்பற்றிக் கொண்டமையையும் பார்த்துத் தனது படைகளை ஒரு சேர ஆக்கிக் கொண்டு நிரலாகப் பகைவருடன் போராற்றுகின்ற உருமண்ணுவா நம்முடைய கருத்தின் கண்ணுறையும் காரியத்தை நன்கு நிறைவேற்றுங்காலம் இது போலும் என்று தனக்குட் கருதி அயலிலே போராற்றிய சினமிக்க வெள் வேலேந்திய கேகய மன்னனைக் கூவி ''மிக விரைந்து வருக வருக! போர் செய்கின்ற பகைவருடைய பெரிய படைகள் உடைந்தோடும் செவ்வி போலத் தோன்றுகின்றது,'' என்று அவனுக்கு உணர்த்தி; என்க.
 
(விளக்கம்) ஒருக்கி - ஓரிடத்தே கூட்டி. நிரல் பொரூஉம், நிரலாக நின்று போர் செய்யும். என - என்று கருதி. வேகம் - சினம். அடைதர்க - வருக. அமரார் - பகைவர். உடைவிடம் - உடைந்தோடும் செவ்வி. போல உண்டு - போலக் காணப்படுகிறது.