உரை |
|
3. மகத காண்டம் |
|
20. சங்கமன்னர் உடைந்தது |
|
115 ஆர்ப்பக்
கண்டே யடுதிற லுதயணன்
தாக்கருந் தானைத் தருசகன்
றன்னொடு வேற்றுமை
யிலனிவன் போற்றினை யாயிற்
பெறற்கரு நும்பியைப் பெறுதி
நீயெனத்
திறப்படக் கூறி மறப்படை நூறக்
|
|
(இதுவுமது)
115 -
119 : கண்டே.........நூற
|
|
(பொழிப்புரை) பகைவரைக் கொல்லும் ஆற்றலுடைய உதயண மன்னன் இந்நிகழ்ச்சியினைக்
கண்கூடாகக் கண்டு அந்த எலிச் செவியரசனை நோக்கி ''வேந்தே ! பகைவரால்
தாக்குதற்கரிய பெரிய படையினையுடைய தருசக மன்னனோடு நின்னாற் பற்றப்பட்ட இம்மறவன்
வேற்றுமை ஏதும் இல்லாதவன் ஆவன்; ஆதலின் இவனை நீ கொல்லாமல் பாதுகாப்பாயாயின்
நீயும் பெறற்கரும் நின் தம்பியை உயிரோடு பெறுகுவை'' என்று அவனுக்கு உறுதியுண்டாகக்
கூறிப் பின்னர்த் தன்னெதிரேயுள்ள மறமிக்க பகைப் படையைக் கொல்லுந் தொழிலிலே புகா
நிற்ப; என்க.
|
|
(விளக்கம்) தருசக மன்னனுக்கு நின்னால் கைப்பற்றப்பட்ட இவன் மிகச்சிறந்த
நண்பனாவான் ஆதலின் அம்மன்னன் இவன் பொருட்டு நின்றம்பியை விடுதலை செய்வன் என்பது
கருத்து. போற்றினையாயின் - கொல்லாமல் பாதுகாப்பாயாயின். போற்றினையாயின்
நும்பியைப் பெறுதி என்றது போற்றாக்கால் நும்பி கொல்லப்படுவன் என்பது தோன்ற
நின்றது.
|