பக்கம் எண் :

பக்கம் எண்:366

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
          எடுத்த பெரும்படை யெழுச்சியு மிறுதியும்
    135    பரப்புஞ் சுருக்கும் பாழியு மறியான்
          விலக்கவு நில்லான் றலைக்கொண் டோடித்
          தமரையுந் தீர்ந்து நமரையு நண்ணான்
          கேளன் மன்னன் வாள்வாய்த் துஞ்சி
          மாக விசும்பி னின்றுயி லேற்றனன்
    140    கேகயத் தரச னெனவது கேட்டே
 
                  (உதயணன் கூறுதல்)
               134 - 140 : எடுத்த.........கேட்டே
 
(பொழிப்புரை) அதுகேட்ட உதயண மன்னன், ''நண்பனே ! நம் படைத் தலைவனாகிய கேகய மன்னன் நம்பால் போர்க்குவந்த பகைவரது பெரிய படையினது எழுச்சியையும் இறுதியையும் பரப்பையும் சுருக்கத்தையும் வலிமையையும் சிறிதும் அறியாதவனாய் யாங்கள் தடுக்கவும் நில்லாதவனாய்த் தானே போரை மேற்கொண்டு விரைந்துசென்று தன் துணை மறவர்களினின்றும் விலகி நம்படைத் தலைவர்பாலும் வாராதவனாய் அப்பகைவர் சூழலிற்பட்டு அப்பகை மன்னன் ஒருவனுடைய வாளினாலே இறந்துபோய் மேனிலை யுலகத்தே இனிய துயிலை மேற்கொள்வானாயினன்'' என்று கூறாநிற்க, அத்துயரச் செய்தியைக் கேட்ட மகத மன்னன்; என்க.
 
(விளக்கம்) எழுச்சி - தொடக்கம். பாழி - வலிமை. யாங்கள் விலக்கவும் நில்லான் என்க. தமர் என்றது. அவனுக்குத் துணையாகிய படைமறவரை. நமர் என்றது, படைத்தலைவர்களை. கேளன் மன்னன் : பகை மன்னன்; என்றது எலிச்செவியரசனை. துஞ்சி - இறந்து. மாக விசும்பு: இரு பெயரொட்டு. அது - அத்துயரச் செய்தி.