பக்கம் எண் :

பக்கம் எண்:367

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
          தன்கடன் றீர்த்துத் தக்க தாற்றினன்
          என்பது கூறி யன்புநெகிழ்ந் துருகிப்
          பேரா விடும்பையு ளாராய்ந் தவனைக்
    145    கூரெரிப் படுத்துக் குறைவினை நீக்கி
 
                  (தருசகன் கூறுதல்)
                141 - 145 : என்.........நீக்கி
 
(பொழிப்புரை) ''அந்தோ ! அக் கேகய மன்னன் திறத்திலே யான் செய்தற்குரிய கடமையைச் செய்யாதொழிந்தேனே ! அங்ஙனமிருப்பவும் அப்பெரு மகன் என்திறத்திலே தான் செய்தற்குரிய கடமையைச் செய்துமுடித்து 'புகழத் தகுந்ததொரு செயலையும் செய்தான்' என்னுமிதனை அவன்பால் பேரன்புடைய தன் நெஞ்சு நெகிழ்ந்து உருகிக் கூறி அகலாத துன்பத்தோடு சென்று அப்போர்க் களத்தின்கண் அவன் உடலை ஆராய்ந்து கண்டு எடுத்துக் கூர்த்த நெருப்பின்கட் பெய்து அக்கடமையைக் கழித்து; என்க.
 
(விளக்கம்) என்கடன் என்றது, பதுமாபதியை அவனுக்கு வழங்குதலை. தன்கடன் தீர்த்து என்றது, உற்றுழி உதவியதனை. தக்கதாற்றி என்றது, போர்க்களத்தின்கண் தன் பொருட்டு இறந்துபட்டமையை என்க. போர்க்களத்தின்கண் அவன் உடலை ஆராய்ந்து என்க.
கூரெரி - கூர்த்த நெருப்பு. குறைவினை - செய்தற்குரியதாய் எஞ்சி நிற்கும் செயல் ; என்றது இறுதிக்கடனை.