பக்கம் எண் :

பக்கம் எண்:368

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
          மகதவ ரிறைவனும் வத்தவ மன்னனும்
          அகனகர் புகுந்த காலை முகனக
          மணிச்சுதைக் குன்றமு மண்டபத் துச்சியும்
          அணித்தகு மாடமு மரும்பெறற் புரிசையும்
    150    நிலைக்கா லேணியுந் தலைச்சிறந் தேறி
          இரும்பே ருலக மொருங்கியைந் ததுபோற்
          றெருவு மன்றமுந் திருமணன் முற்றமும்
 
         (தருசகனும் உதயணனும் நகர் புகுதலும்
                   நகரமாந்தர் செயலும்)
             146 - 153 : மகதவர்.........கொண்டு
 
(பொழிப்புரை) ''அம்மகத வேந்தனும் வத்தவ வேந்தனும் மற்றைய மறவர்களோடும் அவ்விராசகிரிய நகரத்தின்கண் புகுந்தபொழுது அந்நகரத்தின்கண் வாழும் மாந்தர்கள் மகிழ்ச்சியாலே முகம் மலர்ந்து நீலமணிபோலும் நிறமுடையனவாகச் சுதை தீற்றப்பட்ட செய்குன்றங்களின் மேலும் மண்டபங்களின் உச்சியிலும் அழகுடைய மேனிலைமாடங்களிலும் பகைவராற் பற்றுதற்கரிய மதிலுச்சியினும் நிலைத்த காலையுடைய நகர்காண் ஏணிகளிடத்தும் ஊக்கமுடையராய் ஏறி நின்றும் பேருலகத்து வாழும் மாந்தர்கள் எல்லாம் ஓரிடத்தே வந்து கூடினாற்போலக் குழுமி அந்நகரத் தெருக்களிலும் மன்றங்களிலும் அழகிய புது மணல் பரப்பப்பட்ட முற்றங்களினிடத்தும் மலர்ந்த செந்தாமரை மலர்போன்ற முகங்களையுடையவராய் வந்து நிரம்பி; என்க.
 
(விளக்கம்) மணி குன்ற மாகலின், நீலமணி என்க. குன்றம் - செய்குன்றம். மாடம் - மேனிலை மாடங்கள். பகைவரால் பற்றுதலரிய புரிசை என்க; புரிசை - மதில். நிலைக்காலேணி - நகர் காணேணி. உலகம் - உலகத்திலுள்ள மாந்தர் ; ஆகுபெயர். மன்றம் - ஊரம் பலங்கள். மலரணி - மலர்போன்ற. அணி : உவம வுருபு. இறை கொண்டு - தங்கி இருந்து.