பக்கம் எண் :

பக்கம் எண்:369

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
          கீழு மேலுங் கேட்புழி யெல்லாம்
    155    வாழ்க மற்றிவ் வத்தவர் பெருமகன்
          என்னா டிதுவன் றென்னான் சென்றுழி
          அந்நாட் டிடுக்கணு மச்சமு மகற்றும்
          தத்துவ நெஞ்சத் துத்தம னென்மரும்
          வனப்பிற் கேற்ற வலியும் விச்சையும்
    160    சினப்போ ரிவற்கே சேர்ந்தவென் போரும்
          வஞ்சச் சூழ்ச்சியின் வணக்கி னல்லதை
          அஞ்சா திவனை யமர்வென் றழிக்கும்
          வெஞ்சின வேந்தரிங் கில்லென் போரும்
 
                (உதயணனைப் புகழ்தல்)
            154 - 163 ; கீழும்.........இல்லென்போரும்
 
(பொழிப்புரை) இவ்வாறு தெரு முதலிய கீழ் நிலத்தும் குன்று முதலிய மேலிடங்களிலும் குழுமிய மாந்தர் கேட்கு மிடமெல்லாம் இவ் வத்தவ அரசனாகிய உதயண மன்னன் நீடூழி வாழ்க; என்று வாழ்த்துவோரும், இப்பெருமகன் யாங்குச் சென்றாலும் இந்நாடு என்னுடைய நாடன்று என்று நினையாதவனாய் அவ்வந் நாட்டினும் உள்ள மாந்தர்க்கெய்திய துன்பங்களையும் அச்சத்தையும் அகற்றுமொரு மேம்பட்ட நெஞ்சத்தையுடைய உத்தமன் கண்டீர் ! என்று பாராட்டிப் புகழ்வாரும், இப்பெருமகன் பேரழகும் அப் பேரழகிற்கு ஏற்ற ஆற்றலும் கல்வியும் உடையவன் கண்டீர் ! இவ்வுலகத்தில் வெகுளுதற்குக் காரணமான போராற்றலையுடைய இம்மன்னனுக்கே இந்நலங்களெல்லாம் ஒருங்கியைந்தன கண்டீர் ! என்று வியப்போரும், இவனை வஞ்சச் சூழ்ச்சியினாலே வென்றாலல்லது நேரில் எதிர்த்து போர்செய்து வென்று அழிக்கத் தகுந்த வெவ்விய சினமுடைய பிறவேந்தர் இவ்வுலகத்திலே இல்லை என்பாரும்; என்க.
 
(விளக்கம்) கீழ் - கீழிடம், மேல் - மேலிடம். கேட்புழி - செவி கொடுத்துக் கேட்குமிடமெல்லாம். ''யாது மூரே யாவருங் கேளிர்'' என்று எண்ணும் பெருந்தகையுள்ளம் படைத்தவன் என்பார், ''என்னாடிதுவன் றென்னான், சென்றுழி அந்நாட் டிடுக்கணும் அச்சமுமகற்றும் தத்துவ நெஞ்சத் துத்தமன்'' என்றார். இத்தொடர் நினைந்து இன்புறற்பாலது. வனப்பு - அழகு. ''உருவிற்கமைந்தவுணர்வு நன்குடைமை'' எனப்பிறாண்டும் கூறினர் (3 . 14: 169). விச்சை - கல்வி. இவர்க்கே சேர்ந்த என்புழி, ஏகாரம் ஏனையோரைப் பிரித்தலின் பிரிநிலை. வஞ்சச் சூழ்ச்சியின் வணக்கினல்லதை அஞ்சாதிவனை அமர்வென்றழிக்கும் வெஞ்சின வேந்தர் இல்லென்றது பண்டு அவனைப் பிரச்சோதனன் வஞ்சத்தாற் சிறைப்படுத்தியதைக் கருதிக் கூறியவாறு.