பக்கம் எண் :

பக்கம் எண்:37

உரை
 
3. மகத காண்டம்
 
3. இராசகிரியம் புக்க
 
         
     25    பொறிநிலை யமைந்த போர்ப்பெருங் கதவிற்
           செறிநிலை யமைந்த சித்திரப் புதவின்
           யாப்புற வமைத்த வாய்ப்புடைப் பணதி
           வல்லோர் வகுத்த செல்வக் கூட்டத்
           தாய்நலக் கம்மத் தழகொடு புணர்ந்து
     30    தீயழற் செல்வன் செலவுமிசை தவிர்க்கும்
           வாயின் மாடத் தாய்நல வணிமுகத   
 
           (இதுவுமது)
      25 - 31 : பொறி.........முகத்து
 
(பொழிப்புரை) பொறியையுடைய நிலையோடு பொருந்திய
  பொருத்து -வாயுடைய பெரிய இரட்டைக் கதவுகளும், அப்பெருங்
  கதவின்கண்ணே செறித்துச் செய்யப்பட்ட- சித்திரத் தொழிலையுடைய
  சிறு கதவுகளும் ஆகிய உறுதியாக அமைக்கப்பட்ட பொருத்தமான
  அணிகலன்களையும் வல்லவர்களாலே இயற்றப்பட்ட பிறசெல்வத்
  தொகுதியோடே நுண்ணிய நன்மையுடைய தொழில் அழகோடு கூடி
  உயர்ந்து ஞாயிற்று மண்டிலத்தின் இயக்கத்தையும் தவிர்க்கின்ற கோபுரம்
  என்னும் ஆராய்தற்குரிய நன்மையுடைய அழகிய முகத்தையும் என்க.
 
(விளக்கம்) பொறி-இயந்திரம்;இலச்சினையுமாம்,
  போர்-பொருத்தல்- செறிநிலை யமைந்த சித்திரப் புதவு என்றது
  பெருங்கதவின்கண் அமைக்கப்பட்ட சிறுகதவுகளை. புதவு-கதவு,
  பணதி-அணிகலன், இதனைப் பணிதி என்றும் வழங்குப. தீயழற்
  செல்வன்-ஞாயிறு, வாயின்மாடம்-கோபுரம், பெருங்கதவும்  புதவும்
  ஆகிய பணதியையும் வாயின் மாடமாகிய முகத்தையும் என்க.