பக்கம் எண் :

பக்கம் எண்:371

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
         
    170    அலைகடன் ஞாலத் தாக்கையொ டாருயிர்
           நிலைநின் றமையாது நிரைவளைத் தோளி
           துஞ்சியுந் துஞ்சா டோணல நுகர்ந்த
           வெஞ்சின வேந்தனவள் விளிவு முந்துறீஇப்
           புன்கண் கூரப் புலம்புகொண் டாற்றான்
    175     தன்னகர் துறந்து தலைமை நீக்கிப்
           பின்னிவ ணிரங்கப் பெற்றன ளாதலின்
           அவளே புண்ணிய முடையளென் போரும்
 
              (வாசவதத்தையைப் புகழ்தல்)
           170 - 177 : அலைகடன்.........என்போரும்
 
(பொழிப்புரை) அதுகேட்டு ஒரு சிலர் ''அங்ஙனம் அக் கோப்பெருந்தேவியை இகழாதே கொண்மின்? அலையையுடைய கடல் சூழ்ந்த இவ்வுலகத்தின் கண் பிறந்தோரெல்லாம் இறத்தல் ஒருதலை. உயிர் உடலோடு எற்றைக்கும் நிலைநிற்பதொன்றன்று. நிரல் பட்டவளையலணிந்த தோள்களையுடைய அவ்வாசவதத்தை நல்லாளே இவ்வுலகத்தே இறந்தும் இறவாதவள் கண்டீர் ! அஃதெற்றாலெனின்? அப் பெருமகளுடைய தோளினது இன்பத்தை நுகர்ந்த வெவ்விய சினமுடைய இப்பெருமான், அப்பெருமாட்டியினது இறப்பினை முன்னிட்டு உண்டான துயரம் நாடோறும் மிகுதலாலே புலம்புற்று ஆற்றாதவனாய்த் தன் நகரத்தைத் துறந்து தனது அரசுரிமையையும் துறந்து அவளுக்குப் பின் இந்நாட்டிற்கு வந்தும் இரங்குதற்குரிய சிறப்பினைப் பெற்றனள், ஆதலாலே, கற்புடைப் பெண்டிருள் வைத்து அப்பெரு மாட்டியே மிகப் பெரிதும் புண்ணியமுடையள் காண் !'' என்று அவ்வாசவதத்தையைப் பெரிதும் பாராட்டுவோரும்; என்க.
 
(விளக்கம்) உலகின்கண் பிறந்தோரெல்லாம் இறத்தல் இயல்பே ; அது பழியன்று என்பார் ஞாலத்து ஆக்கையொடு ஆருயிர் நிலை நின்றமையாது என்றார். தோளி : வாசவதத்தை. துஞ்சியுந் துஞ்சாள் - இறந்தும் இறவாதவள். விளிவு - இறப்பு, புன்கண் - துன்பம். கூர - மிக. புலம்பு - அழுகை. தலைமை - அரசுரிமை. இவண் - இவ்விராசகிரிய நகரத்தின்கண்ணும், இவணும் எனல் வேண்டிய உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது; வாசவதத்தை சிறிது காலமே கணவனொடு வாழ்ந்தும் அக்கணவன் நெஞ்சை இங்ஙனம் கவர்ந்துள்ளாள். ஆதலின் அவளே புண்ணிய முடையவள் என்று புகழ்ந்தபடியாம்.